கர்நாடக அரசியல் இழுபறி முடிவுக்கு வந்தது முதல்-மந்திரியாக எடியூரப்பா, இன்று பதவி ஏற்கிறார்


கர்நாடக அரசியல் இழுபறி முடிவுக்கு வந்தது முதல்-மந்திரியாக எடியூரப்பா, இன்று பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 17 May 2018 12:00 AM GMT (Updated: 16 May 2018 8:20 PM GMT)

கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு பதவி ஏற்கிறது. 15 நாளில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார். #Yeddyurappa

பெங்களூரு,

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் ஆகியவற்றை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம் (எஸ்) 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதனால் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

இதைதொடர்ந்து 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க விடக் கூடாது என முடிவு செய்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்தது. இதற்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட எடியூரப்பா கவர்னரை நேரில் சந்தித்து, பா.ஜனதாவை ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதே போல் காங்கிரஸ் ஆதரவுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியும் தனக்கு ஆட்சி அமைக்க அனுமதி வழங்குமாறு கோரி கவர்னரிடம் கடிதம் கொடுத்தார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார்? என்று கர்நாடகம் மட்டுமின்றி நாடே எதிர்பார்த்து கொண்டிருந்தது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களிடம் இருந்து கவர்னர் வஜூபாய் வாலா சட்ட ஆலோசனை பெற்றுள்ளார்.

அப்போது 2-வது, 3-வது நிலையில் வெற்றி பெற்ற கட்சிகளின் கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தாலும், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சிக்கு, ஆட்சி அமைக்க அனுமதி வழங்கலாம் என்று வக்கீல்கள் ஆலோசனை கூறியதாக தகவல் வெளியானது.

எனவே, ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார் என்றும், இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி அளவில் பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது என்றும் பா.ஜனதா தலைவர்கள் நேற்று இரவு தெரிவித்தனர்.

மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதா சார்பில் 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டதாகவும், அதற்கும் கவர்னர் அனுமதி கொடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. பெரும்பான்மையை நிரூபித்த பிறகு மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர்.

இந்த தகவலை கவர்னர் மாளிகை பின்னர் உறுதி செய்தது.

முன்னதாக நேற்று காலை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் எடியூரப்பா சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த கூட்டம் முடிந்ததும் எடியூரப்பா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஒரு கடிதத்தையும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க் கள் கையெழுத்து அடங்கிய கடிதம் ஒன்றையும் கவர்னரிடம் எடியூரப்பா கொடுத்தார். சட்டசபையில் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றும் எடியூரப்பா உறுதியளித்தார்.

ராணிபென்னூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சங்கர் பா.ஜனதாவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார். இதையடுத்து பா.ஜனதாவின் பலம் 105 ஆக அதிகரித்தது.

ஆனால், மதியம் திடீர் என்று அவர் தனது ஆதரவை மாற்றிக்கொண்டு காங்கிரசை ஆதரிப்பதாக அறிவித்தார். எனவே பா.ஜனதா பலம் மீண்டும் 104 ஆனது.

இதற்கிடையே ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் சட்டசபை ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவராக குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே போன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் பெங்களூருவில் நடந்தது. இதில் 66 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 12 பேர் கலந்து கொள்ளாததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய பலரும், கட்சியின் தோல்விக்கு சித்தராமையாவை குற்றம் சாட்டியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற்று உள்ளதாக கூறி, அவர்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச்சென்று அணிவகுப்பு நடத்த குமாரசாமி முடிவு செய்தார். ஆனால் அதற்கு கவர்னர் மாளிகை அனுமதி அளிக்கவில்லை.

மேலும், ஜனதாதளம் (எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 5 பேர் மட்டுமே கவர்னரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து, தங்களுக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறி பட்டியல் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

பின்னர் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா கட்சியினர் பேரம் பேசி அழைத்துச் செல்வதை தடுப்பதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நேற்று இரவு 2 சொகுசு பஸ்களில் ஓய்வு விடுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 

Next Story