யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலர் லஞ்சம் கேட்டதாக புகார்: நடவடிக்கை எடுக்க கவர்னர் வலியுறுத்தல்


யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலர் லஞ்சம் கேட்டதாக புகார்:  நடவடிக்கை எடுக்க கவர்னர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jun 2018 5:44 AM GMT (Updated: 8 Jun 2018 5:44 AM GMT)

யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலர் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் முதன்மை செயலராக இருப்பவர் ஷாஷி பிரகாஷ் கோயல். இவர் மீது அங்குள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்த அபிசேக் குப்தா எனபவர் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பெட்ரோல் பங்க் ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருந்ததாகவும், அது அமைய உள்ள பகுதி மிகவும் குறுகலாக இருந்ததால், அந்த சாலையை விரிவுபடுத்த ரூ.25 லட்சம் கேட்டதாக முதன்மை செயலர்    மீது குற்றம் சுமத்தி அபிசேக் குப்தா  கவர்னருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார். 

இதையடுத்து, முதல் மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ள கவர்னர் ராம்நாயக், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, புகாருக்கு முகாந்திரம் இருந்தால் முதன்மை செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். கவர்னர் எழுதியுள்ள கடிதத்தால், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, “ அபிசேக் குப்தா ஏற்கனவே பலமுறை தனது  தனிப்பட்ட இலாபத்துக்காக பலமுறை பாஜக மூத்த தலைவர்களின் பெயரை பயன்படுத்தியுள்ளார். இருந்த போதிலும், இந்த விவகாரத்தில், கவர்னர் தனது கடமையை செய்துள்ளார். அதிகாரி மீது குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

Next Story