விமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்


விமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்
x
தினத்தந்தி 17 Jun 2018 10:15 PM GMT (Updated: 17 Jun 2018 9:53 PM GMT)

இந்தியாவின் அனைத்து ரெயில்களிலும் ரெயில் பெட்டிகளில் உள்ள சாதாரண கழிவறைகளை மாற்றிவிட்டு பயோ கழிவறைகளை பொருத்த மத்திய ரெயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புதுடெல்லி,

பயோ கழிவறை முறையை மேம்படுத்தி விமானங்களில் இருப்பது போன்ற அதிநவீன பயோ கழிவறைகளை பொருத்த ரெயில்வே நிர்வாகம் தயாராக இருப்பதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது இது பற்றி அவர் கூறியதாவது:–

விமானங்களில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன பயோ கழிவறைகளை பொருத்துவதற்கான சோதனையில் இறங்கி உள்ளோம். இதற்காக சுமார் 500 அதிநவீன பயோ கழிவறைகளை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனை வெற்றி அடைந்தால் இந்திய ரெயில்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் கழிவறைகளையும் அதிநவீன பயோ கழிவறைகளாக மாற்றம் செய்ய பணம் செலவிட நான் தயாராக உள்ளேன்.

ஒரு அதி நவீன பயோ கழிவறைக்கு சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவு ஆகும். அதிநவீன பயோ கழிவறையை பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் பயன்பாடு வெகுவாக குறையும். துர்நாற்றம் இருக்காது. மேலும் கழிவறையில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இத்திட்டம் வெற்றிபெற்றால் அது நம் நாட்டின் மிகப்பெரிய சாதனையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story