புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது? சிவசேனா கேள்வி


புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது? சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 17 July 2018 9:34 AM GMT (Updated: 17 July 2018 9:43 AM GMT)

மராட்டியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு சிவசேனா கட்சி தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. #ShivSena #DairyFarmers

மும்பை,

மராட்டியத்தில் பால் ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட வேண்டும் என்று அரசிடம் அம்மாநில பால் உற்பத்தி விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கான போராட்டத்தையும் முன்னெடுத்து உள்ளார்கள். போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளால் பால் டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டது. விவசாயிகளின் இப்போராட்டத்திற்கு சிவசேனா கட்சி ஆதரவை தெரிவித்து உள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில், “இப்போராட்டம் விவசாய சங்க தலைவரால் தொடங்கப்பட்டு உள்ளது என்பதற்காக இதனை நிராகரித்துவிட முடியாது. 

விவசாயிகள் எந்தவொரு குறிப்பிட்ட மதம், ஜாதி அல்லது அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கிடையாது. கடந்த 4 வருடங்களில் மட்டும் 3000 விவசாயிகள் உயிரிழந்து உள்ளார்கள், அவர்களில் பெரும்பாலானோர் பிரதமர் மோடிக்கு வாக்களித்தவர்கள். கடந்த வருடம் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மேற்கொண்ட முழு அடைப்பு அரசுக்கு அவமரியாதையாகும். இப்போது பால் உற்பத்தி விவசாயிகள் மேற்கொண்டு உள்ள போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அவர்களுக்கு எப்படி உதவிசெய்ய முடியும் என்று அரசு சிந்திக்க வேண்டும். 

பா.ஜனதா அரசு ஒருபுறம் விவசாயிகளின் போராட்டத்தை முடக்க பார்க்கிறது, மறுபுறம் விவசாயம் வாழ்க என கோஷம் எழுப்புகிறது. 

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 27 என அரசு நிர்ணயம் செய்து உள்ளது, ஆனால் விவசாயிகளுக்கு இன்னும் ரூ. 16-18 மட்டுமே வழங்கப்படுகிறது.

கோவா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பால் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ. 5 மானியம் வழங்கப்படுகிறது. அதேபோன்று மராட்டிய மாநில விவசாயிகள் கோரிக்கையை முன்னெழுப்புவதில் என்ன தவறு இருக்கிறது. புல்லட் ரெயில் திட்டத்திற்கு அரசு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. புல்லட் ரெயில் திட்டத்திற்காக கடன் வாங்கவும் பேசுகிறது, ஆனால் விவசாயிகளுக்காக 5 ரூபாயை கூட்ட மறுக்கிறது, தயக்கம் காட்டுகிறது. பிரதமர் மோடி விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதாரவிலையை உயர்த்தியுள்ளார், இது மராட்டியத்தில் உள்ள விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா என்பதை தேவேந்திர பட்னாவிஸ் விளக்க வேண்டும். 

“பிரதமர் மோடிக்கு வாக்களித்த விவசாயிகள் அனைவரும் மனஉளைச்சலில் உள்ளார்கள். அதனால்தான், பாந்த்ரா-கோந்தியா பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் விவசாயிகளால் பா.ஜனதா தோற்கடிக்கப்பட்டது. பால்கர் சட்டசபைத் தொகுதியில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. ”  பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும் போது பொதுமக்கள் சகித்துக் கொள்கிறார்கள், ஆனால் பால் கொள்முதல் விலையில் அதிகரிப்பு என்பது வாழ்வு மற்றும் இறப்பு சார்ந்த விஷயமாகும். புல்லட் ரெயில் திட்டம் மற்றும் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தில் பிடிவாதமாக இருக்கும் அரசுக்கள் விவசாயிகளுக்கு நியாயம் வழங்குவது எப்போது? என கேள்வியை எழுப்பியுள்ளது.


Next Story