கேரளாவில் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 24 பேர் சாவு


கேரளாவில் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 24 பேர் சாவு
x
தினத்தந்தி 9 Aug 2018 10:54 PM GMT (Updated: 9 Aug 2018 10:54 PM GMT)

கேரளாவில் கன மழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் இறந்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது.

இடுக்கி,

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. சில நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள அடிமாலி நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கினர். இவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் 2 சிறுமிகள் உள்பட 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

கேரள மாநிலத்தில் மலப்புரம், கோழிக்கோடு வயநாடு, இடுக்கி, கண்ணூர், பாலக்காடு, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 24 பேர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நிலச்சரிவால் பெரும்பாலான பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து மூணாறுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதையடுத்து மூணாறில் இருந்து தேனி, போடி, மதுரை பகுதிகளுக்கு பூப்பாறை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

பலத்த மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்பு பணிக்கு துணை ராணுவத்தை ஈடுபடுத்த அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை பெங்களூருவில் இருந்து துணை ராணுவத்தினர் விரைந்தனர். இதேபோல் சென்னையில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 45 பேர் கேரளா சென்றனர். அவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தொடர் மழை பெய்து வருவதால் இன்றும் (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

பெரியாறில் வெள்ளம் பெருக்கெடுத்து கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்குள் புகுந்தது. ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியதால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட பல்வேறு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

இடுக்கி அணை ஆசியாவிலேயே 2–வது மிகப்பெரிய அணையாக விளங்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 401 அடி உயரம் உள்ள இந்த அணையில் நீர்மட்டம் 2 ஆயிரத்து 398 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இடுக்கி அணைக்கு மதகுகள் இல்லாததால் அதன் துணை அணையான செருதோணி அணை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி 1981–ம் ஆண்டும், 1992–ம் ஆண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு குறித்து கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

மாநிலம் முழுவதும் பெய்து வரும் கன மழையால் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடுக்கி, இடமலையார் உள்பட 22 அணைகள் நிரம்பும் நிலையில் திறக்கப்பட்டு உள்ளன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறோம்.

வயநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டு உள்ளது. மேலும் மத்திய அரசு வெள்ள நிவாரண உதவியையும் உடனடியாக அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story