காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை


காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Sep 2018 10:00 PM GMT (Updated: 13 Sep 2018 8:52 PM GMT)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 4 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு, 

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 4 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

உணவு கேட்ட பயங்கரவாதிகள்

காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் ஜஜ்ஜார் கொத்லி பகுதியில் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு காக்ரியல் வனப்பகுதிக்குள் தப்பிச்சென்று விட்டனர். அன்று இரவு அங்குள்ள கிராமவாசி ஒருவரது வீட்டிற்குள் 3 பயங்கரவாதிகள் புகுந்தனர்.

மேலும் தங்களுக்கு பசி எடுத்ததால், உணவு கேட்டுள்ளனர். ஆயுதங்களுடன் கிழிந்த உடையுடன் வந்த அவர்கள் உடை மாற்றிக்கொண்டு, பிஸ்கெட்டுகளை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளனர். முன்னதாக பயங்கரவாதிகள் வீட்டிற்குள் நுழைந்ததும் கிராமவாசியின் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வைக்க கூறினர்.

துப்பாக்கி சண்டை

இதுகுறித்து காஷ்மீர் மாநில போலீசாருக்கு கிராமவாசி ஒருவர் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து பயங்கரவாதிகளை சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டை நேற்றும் தொடர்ந்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடம் அருகே சென்றதும், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 8 பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தனர்.

மேலும் 2 பயங்கரவாதிகள்

இதற்கிடையே பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கோட்டு பகுதியை கடந்து வந்ததாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

முன்னதாக நேற்று காலை பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.


Next Story