5 மாநில சட்டசபை தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு காங்கிரஸ் குற்றச்சாட்டு


5 மாநில சட்டசபை தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Oct 2018 11:00 PM GMT (Updated: 7 Oct 2018 10:22 PM GMT)

5 மாநில சட்டசபை தேர்தலுக்காகவே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுவதால் இவற்றின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே உயர்ந்து வரும் இந்த எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 குறைத்து கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது. இதைப்போல மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன்பேரில் சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டன.

ஆனால் மத்திய அரசின் இந்த திடீர் விலை குறைப்பு நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

கர்நாடக தேர்தலின் போது 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. குஜராத் தேர்தலின் போதும் இதே நிலை கடைப்பிடிக்கப்பட்டது. இப்படி தேர்தல் கால அட்டவணையை சார்ந்து பெட்ரோல், டீசல் விலை மாறுபடுவது ஏன்?

தற்போதும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்குப்பிறகு கூட இந்த எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது.

இதிலிருந்தே மோடி அரசின் போலித்தனமும், இரட்டை வேடமும் வெளிப்படுகிறது. இந்த அரசு குறுகிய கால பாராட்டுகளில் நம்பிக்கை வைத்து இருக்கிறது. தேர்தல் வெற்றிக்காக போடும் இத்தகைய இரட்டை வேடத்தை தவிர்க்கவே பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

‘ஒவ்வொரு வீட்டிலும் மோடி’ என்ற காலத்தை தொடர்ந்து ‘சென்று வாருங்கள் மோடி’ காலம் வருகிறது. இவ்வாறு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் உங்கள் ஆட்சி கிளம்பும் நேரத்தில் மக்களின் முகத்தில் புன்னகையை பார்க்க முடியும்.

பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோலுக்கான மத்திய கலால் வரியை 211 சதவீதமும், டீசல் மீதான கலால் வரியை 443 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது. இதைப்போல பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மாநில அரசுகளின் ‘வாட்’ வரியும் அதிகரித்து இருக்கிறது.

இவ்வாறு பவன் கெரா கூறினார்.


Next Story