பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு தெரிவித்த என்ஜீனியர் கைதில் முக்கிய தகவல்கள்


பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு தெரிவித்த என்ஜீனியர் கைதில் முக்கிய தகவல்கள்
x
தினத்தந்தி 8 Oct 2018 3:29 PM GMT (Updated: 8 Oct 2018 3:29 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் பிரமோஸ் ஏரோபேஸில் பணியாற்றிய என்ஜீனியர் பாகிஸ்தானுக்கு தொழில்நுட்பங்களை தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.



நாக்பூர்,


பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்துள்ளது என ஏடிஎஸ் பிரிவு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். வர்தா சாலையில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து போலீஸ் கைது செய்துள்ளது. அகர்வால் ரூர்கேவை சேர்ந்தவர் என்றும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. 

பிரமோஸ் ஏரோபேஸ் தளம் இந்தியாவின் ஏவுகணைகளை பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி மையம் (டிஆர்டிஒ) மற்றும் ரஷியாவின் கூட்டு நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது. 1998-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி இந்தியா மற்றும் ரஷியா இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் அடிப்படையில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிஷாந்த் அகர்வால் மையத்தில் 4 ஆண்டுகளாக தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றியுள்ளார், அங்கிருந்து தொழில்நுட்ப தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் உள்பட பிற நாடுகளுக்கும் அவர் உளவு பார்த்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குருஷேத்திரா என்ஐடியில் என்ஜீனியரிங் கோல்டு மெடல் வாங்கியவர் நிஷாந்த் அகர்வால் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையே என்ஜீனியர் எப்படி பாகிஸ்தானின் உளவுப்பிரிவின் பிடியில் சிக்கினார் என்பது தொடர்பாகவும் விசாரணை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக பேஸ்புக் வாயிலாக அவர் ஆசைக்கு தூண்டப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பெண் பெயரிலான போலியான பேஸ்புக் ஐடியின் வாயிலாக பாகிஸ்தான் உளவுப்பிரிவிடம் சிக்கியுள்ளார். பேஸ்புக் ஐடியை பரிசோதனை செய்து பார்க்கையில் அது பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேச ஏடிஎஸ் பிரிவு போலீஸ் அசீம் அருண் பேசுகையில், “என்ஜீனியரின் தனிப்பட்ட கம்ப்யூட்டரில் மிகவும் முக்கியமான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த ஐடிகளுடன் அவர் ‘ஷாட்டிங்’ செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது,” என்று கூறியுள்ளார். முதல்முறையாக பிரம்மோஸ் தளத்தில் உளவாளியென ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Next Story