அசாமில் பயங்கரம்: எல்லை பாதுகாப்பு படை வீரர் சுட்டுக்கொலை


அசாமில் பயங்கரம்: எல்லை பாதுகாப்பு படை வீரர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 10 Oct 2018 9:00 PM GMT (Updated: 10 Oct 2018 7:47 PM GMT)

அசாமில் எல்லை பாதுகாப்பு படை வீரர், சக வீரர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

கரிம்கஞ்ச்,

அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தின் லகிபூர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள எல்லைப்புறச்சாவடி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிவ் யோகி பாண்டே என்ற வீரர் பணியில் இருந்தார். அவருடன் எல்லை பாதுகாப்பு படை தலைமை காவலர்களான அசோக் குமார் கங்காரியா, ஏ.ஆர்.பால் ஆகிய இருவரும் இருந்தனர். இரவு சுமார் 9.15 மணியளவில் சிவ் யோகி பாண்டேவுக்கும், மற்ற 2 வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சிவ் யோகி பாண்டே, தனது பணித்துப்பாக்கியை எடுத்து அசோக் குமார் கங்காரியா மற்றும் ஏ.ஆர்.பால் ஆகிய இருவரையும் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.

இதில் அசோக் குமார் கங்காரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஏ.ஆர்.பாலை உயர் அதிகாரிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எல்லை பாதுகாப்பு படையினர், தப்பி ஓடிய சிவ் யோகி பாண்டேவை கைது செய்யும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அசாம் எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story