டெல்லி மாநில மந்திரி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை


டெல்லி மாநில மந்திரி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 10 Oct 2018 10:15 PM GMT (Updated: 10 Oct 2018 8:34 PM GMT)

டெல்லி மாநில மந்திரி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி மாநில போக்குவரத்து மந்திரியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது. இதற்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவரது மந்திரி சபையில் போக்குவரத்து, சட்டம் மற்றும் வருவாய்த்துறை மந்திரியாக இருப்பவர் கைலாஷ் கெலாட்.

நஜப்கர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் மற்றும் குடும்பத்தினர், 2 நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மந்திரி கைலாஷ் கெலாட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். டெல்லியின் வசந்த் கஞ்ச், லட்சுமி நகர், பாலம் விகார் உள்ளிட்ட 16 பகுதிகளில் இந்த சோதனை நடந்தது.

ஆளும் கட்சியை சேர்ந்த மந்திரி ஒருவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை நடவடிக்கை ஆம் ஆத்மி கட்சிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோதனை தொடர்பாக மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘நிரவ் மோடி மற்றும் மல்லையா போன்றோருக்கு நட்பும், எங்களுக்கு வருமான வரித்துறை சோதனையுமா?’ என பிரதமர் மோடிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘மோடிஜி நீங்கள் என்மீதும், சத்யேந்தர், மணிஷ் ஆகியோருக்கும் எதிராக சோதனை நடத்தியபோது என்ன நடந்தது? எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எனவே மற்றுமொரு சோதனை நடத்துவதற்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதற்காக குறைந்தபட்சம் மன்னிப்பாவது தெரிவித்து விடுங்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல ஆம் ஆத்மி கட்சியும் இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் மந்திரிகளின் வீடுகளில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், யார் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ள செய்தி தொடர்பாளர் சவுராப் பரத்வாஜ், இது ஒரு வெட்கக்கேடான செயல் எனவும் வர்ணித்துள்ளார்.


Next Story