தூய்மை கங்கை கோரி உண்ணாவிரத போராட்டம்; மற்றொரு ஆர்வலர் மருத்துவமனையில் அனுமதி


தூய்மை கங்கை கோரி உண்ணாவிரத போராட்டம்; மற்றொரு ஆர்வலர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 14 Oct 2018 3:47 AM GMT (Updated: 14 Oct 2018 3:47 AM GMT)

தூய்மையான கங்கை கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றொரு ஆர்வலர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

ரிஷிகேஷ்,

கங்கையை தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சுற்று சூழல் ஆர்வலரான ஜி.டி. அகர்வால் (வயது 87) என்பவர் கடந்த 109 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.  இதில் உடல்பலவீனமுற்ற அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவர் ஐ.ஐ.டி. பேராசிரியராக பணிபுரிந்தவர்.  கடந்த 4 மாதங்களாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தினால் பலவீனமடைந்திருந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டார்.

இந்த நிலையில், கங்கை படுகைகளில் சுரங்கம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 24ந்தேதியில் இருந்து தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் சந்த் கோபால்தாஸ் (வயது 36) என்ற ஆர்வலர் ஈடுபட்டு வருகிறார்.  

இதில் உடல் பலவீனமடைந்த அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டு உள்ளது.  சர்க்கரை அளவும் குறைந்து உள்ளது.  அவர் எதனையும் சாப்பிட மறுத்து வருகிறார்.  சிகிச்சைக்கும் மறுப்பு தெரிவிக்கிறார்.  அதனால் திரவ ஆகாரம் வழங்கப்படுகிறது என மருத்துவர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

அவரை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எய்ம்ஸ் நிர்வாகத்தினருக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Next Story