“சி.பி.ஐ. இயக்குனர் நீக்கத்துக்கு ‘ரபேல்’ விசாரணையே காரணம்” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


“சி.பி.ஐ. இயக்குனர் நீக்கத்துக்கு ‘ரபேல்’ விசாரணையே காரணம்” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Oct 2018 11:30 PM GMT (Updated: 29 Oct 2018 8:31 PM GMT)

சி.பி.ஐ. இயக்குனர் நீக்கத்துக்கு ‘ரபேல்’ விசாரணையே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு சாட்டினார்.

உஜ்ஜயின்,

ரபேல் போர் விமான விசாரணையை சி.பி.ஐ. இயக்குனர் தொடங்க இருந்ததால், அவரை பிரதமர் மோடி நீக்கினார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று அங்கு சென்றார்.

உஜ்ஜயின் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியதாவது:-

நீக்கப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணையை தொடங்க இருந்தார். அந்த விசாரணையால், உண்மை வெளிவந்து விடும் என்று பிரதமர் மோடி அஞ்சினார். அதனால், நள்ளிரவு 2 மணிக்கு, சி.பி.ஐ. இயக்குனரை நீக்கினார்.

பா.ஜனதா மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோரும் ரபேல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். பிரான்ஸ் முன்னாள் அதிபர், கூட்டு நிறுவனமாக அனில் அம்பானி நிறுவனத்தை சேர்க்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உஜ்ஜயின் நகரைச் சேர்ந்த ஒரு பெண், மின் கட்டணம் செலுத்த தவறியதற்காக, சிறையில் தள்ளப்பட்டு உள்ளார். ஆனால், விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் கடனை வாங்கி விட்டு ஓடிவிட்டனர். இத்தகைய இந்தியாவை காங்கிரஸ் விரும்பவில்லை. நாங்கள் நீதியை விரும்புகிறோம்.

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி பேசினார்.

முன்னதாக, இந்தூருக்கு தனி விமானத்தில் வந்து சேர்ந்த ராகுல் காந்தி, ஹெலிகாப்டரில் உஜ்ஜயின் நகருக்கு சென்றார்.

அங்குள்ள மகாகாளஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் வேட்டி அணிந்து இருந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) 3 பொதுக்கூட்டங்களில் பேசி விட்டு, மாலையில் அவர் டெல்லி திரும்புகிறார்.


Next Story