“ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை தொடங்கினால், பிரதமர் மோடி தப்பிக்க முடியாது” ராகுல் காந்தி உறுதி


“ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை தொடங்கினால், பிரதமர் மோடி தப்பிக்க முடியாது” ராகுல் காந்தி உறுதி
x
தினத்தந்தி 2 Nov 2018 9:58 AM GMT (Updated: 2 Nov 2018 9:58 AM GMT)

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை தொடங்கினால் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் ‘டசால்ட்’ நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. 
ஒப்பந்த விலையில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம் சாட்டும் காங்கிரஸ், ரபேல் விமானங்களின் உதிரிபாகங்கள் தயாரித்து வழங்குவதற்காக இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன், டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது தொடர்பாகவும் தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பி வருகிறது. இதற்கிடையே ஒப்பந்தம் தொடர்பாக வெளியாகும் முரண்பாடான தகவல்களும் வெளியாகி காங்கிரஸின் விசாரணை கோரிக்கைக்கு வலுசேர்க்கிறது. 

இப்போது இன்னும் தொடங்கப்படாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நிறுவனம் ரூ. 284 கோடியை வழங்கியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் மறுத்துள்ளார். இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் விசாரணை நடத்தப்பட்டால் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று கூறியுள்ளார். “டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொய் சொல்கிறார், அவர் பிரதமர் மோடியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். முறைகேடு தொடர்பாக விசாரணையை முன்னெடுத்தால் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது. ஒன்று ஊழலுக்காக மற்றொன்று இவ்விவகாரத்தில் முடிவெடுத்தவர் பிரதமர் மோடி என்பது தெளிவாக தெரியும்.  மோடியால் ரூ. 30000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் அனில் அம்பானிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரபேல் விமானங்களின் உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கஸ் லிமிடெட்(HAL)  நிறுவனத்திடம் இருந்து பறித்து ரிலையன்சுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விமான நிலையத்திற்கு அருகே நிலம் இருந்தது என தெரிவித்துள்ளார். ஆனால் ரிலையன்ஸ் மற்றும் டசால்ட் நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஆன பின்னர்தான் மராட்டிய மாநில அரசு நிலம் ஒதுக்கியது என தி வையர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இச்செய்தியை குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை காப்பாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி என்று கூறியுள்ளார். 


Next Story