துபாயில் உள்ள நீரவ் மோடியின் ரூ.56 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் - அமலாக்கத் துறை நடவடிக்கை


துபாயில் உள்ள நீரவ் மோடியின் ரூ.56 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் - அமலாக்கத் துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2018 12:00 AM GMT (Updated: 6 Nov 2018 10:46 PM GMT)

துபாயில் வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.56 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.

புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள அவர்களை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் நிரவ் மோடியின் வெளிநாட்டுக்கள் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

மேலும் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான அமெரிக்கா, பிரிட்டனில் உள்ள அவருக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. லண்டன், நியூயார்க் நகரங்களில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், வெளிநாட்டு வங்கி கணக்குகள், தங்கம் மற்றும் வைர நகைகள் முடக்கப்பட்டுள்ளன..

இந்நிலையில் துபாயில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.56 கோடி மதிப்பிலான 11 சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த சொத்து முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Next Story