எம்.பி., எம்.எல்.ஏ. என கூறி கொண்டு நன்கொடை கேட்ட மர்ம நபர் மீது வழக்கு


எம்.பி., எம்.எல்.ஏ. என கூறி கொண்டு நன்கொடை கேட்ட மர்ம நபர் மீது வழக்கு
x

எம்.பி., எம்.எல்.ஏ. என கூறி கொண்டு நன்கொடை கேட்ட மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புனே,

மகாராஷ்டிராவில் கடை உரிமையாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.  அதில், மக்களவை எம்.பி. ராஜன் விசாரே பெயரில் பேசிய மர்ம நபர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

அதன்பின்னர் மீண்டும் தொலைபேசியில் அழைத்த அந்த மர்ம நபர் தன்னை எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் என அறிமுகப்படுத்தி கொண்டார் என தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பு சம்பவத்தினை தொடர்ந்து, புகார் அளித்தவர் உள்ளூர் சேனா தலைவர்களை தொடர்பு கொண்டதில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறவில்லை என தெரிய வந்துள்ளது.  2 அரசியல்வாதிகளும் நன்கொடை கேட்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

அந்த மர்ம நபர் நவம்பர் 13-ந்தேதி சில கடை உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்த நாள் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வழங்க வேண்டும்.  அதற்கு நன்கொடை தர வேண்டும் என கேட்டுள்ளார் என்ற விவரம் வெளிவந்துள்ளது.

இதுபற்றி காசர்வடவள்ளி காவல் நிலையத்தில் மோசடி மற்றும் பிற குற்றங்களுக்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  மர்ம நபரின் மொபைல் போன் எண்ணை கொண்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story