ராணுவ உளவாளி என கூறி வாலிபரை சுட்டு கொல்லும் தீவிரவாதிகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ


ராணுவ உளவாளி என கூறி வாலிபரை சுட்டு கொல்லும் தீவிரவாதிகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
x
தினத்தந்தி 17 Nov 2018 3:56 PM GMT (Updated: 17 Nov 2018 3:56 PM GMT)

ராணுவ உளவாளி என்று கூறி வாலிபரை தீவிரவாதிகள் சுட்டு கொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சபாநகரி கிராமத்தில் வசித்து வந்தவர் நதீம் மன்சூர்.  இவர் ராணுவத்திற்கு தீவிரவாதிகளின் இருப்பிடம் பற்றி தகவல் கூறினார் என்ற குற்றச்சாட்டில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், தீவிரவாத இயக்கத்தின் தளபதி ரியாஸ் நைகூ வெளியிட்டுள்ள ஆடியோ பதிவொன்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அதில், தீவிரவாதிகளிடம் பேசும் மன்சூர், வீட்டிற்கு செல்லும் வழியில் கிராமத்தில் தீவிரவாதிகளை பார்த்தேன்.  ராணுவ அதிகாரிக்கு மிஸ்டு கால் ஒன்று கொடுத்தேன்.  அவர் என்னை அழைத்த பின், எனது வீடு அருகே கிராமத்தில் தீவிரவாதிகள் உள்ளனர் என அவரிடம் கூறினேன் என்று பேசியுள்ளார்.

இதுபற்றி பேசிய தளபதி நைகூ, மன்சூர் 2 தீவிரவாதிகளை பற்றி ராணுவத்திடம் கூறியுள்ளான்.  அவர்கள் கடந்த 6ந்தேதி சோபியானின் சபாநகரி பகுதியில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என கூறினார்.

தொடர்ந்து மற்றொரு வீடியோவில், நதீம் மன்சூரின் உடலில் தீவிரவாதிகள் குண்டுகளை பாய்ச்சுகின்றனர்.  இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

இந்நிலையில், மன்சூரின் உடல் நேற்று காலை கைப்பற்றப்பட்டது.  இதற்கு தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர்.

பேராசையால் மன்சூர் படையினரிடம் தகவல் கொடுத்துள்ளான்.  நாங்கள் யாரையும் கொல்ல விரும்பவில்லை.  ஆனால் அவர்கள் (தகவல் அளிப்போர்) எங்களை அப்படி செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்.

இதுபோன்ற வீடியோக்கள் வருங்காலங்களில் வெளியிடப்படும்.  துரோகிகள் இதே முடிவை எட்டுவர் என கூறியுள்ளார்.

Next Story