சட்டசபைத்தேர்தல்: தெலுங்கானாவில் இதுவரை ரூ.99.5 கோடி பறிமுதல்


சட்டசபைத்தேர்தல்: தெலுங்கானாவில் இதுவரை ரூ.99.5 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 4 Dec 2018 5:58 PM GMT (Updated: 4 Dec 2018 5:58 PM GMT)

சட்டசபைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானாவில் இதுவரை ரூ.99.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இதற்கிடையில் ஓட்டுக்காக பணம் தரும் அரசியல் கட்சிகளின் முயற்சியை தடுக்க மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை மற்றும் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை சிறப்பு அதிகாரிகள் போலீசார் துணையுடன் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பெம்பர்தி சோதனை சாவடியில் ஐதராபாத்தில் இருந்து வாரங்கல் நோக்கி சென்ற ஒரு காரில் இருந்து ரூ.5 கோடியையும், மஞ்சிர்யாலில் இருந்து நென்னெல்லா நோக்கி சென்ற ஆட்டோவில் இருந்து ரூ.50 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது பெல்லம்பள்ளி தொகுதி தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் துர்கம் சின்னையாவுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மாநிலத்தில் தேர்தல் பணிகள் துவங்கியதில் இருந்து இதுவரை போலீசாரும், வருமான வரித்துறையினரும் ரூ.99.5 கோடி பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.9 கோடி மதிப்புள்ள மதுவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Next Story