கிலோ 51 பைசா : வெங்காயம் விற்ற பணத்தை முதல்வருக்கு அனுப்பிய விவசாயி!


கிலோ 51 பைசா : வெங்காயம் விற்ற பணத்தை முதல்வருக்கு அனுப்பிய விவசாயி!
x
தினத்தந்தி 7 Dec 2018 10:34 AM GMT (Updated: 7 Dec 2018 11:18 AM GMT)

விவசாய விளைப்பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததை வெளிப்படுத்தும் விதமாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

மராட்டியத்தில் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம்,  கிலோ ஒரு ரூபாய்க்கு விலைக்கு எடுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்து, அதில் கிடைத்த தொகையை பிரதமர் மோடிக்கு அனுப்பினார். இதுபோன்ற போராட்டத்தை மற்றொரு விவசாயியும் முன்னெடுத்துள்ளார். நாசிக் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு விவசாயி பணத்தை மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தர்சுல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரகாந்த் பிகான் தேஷ்முக், மார்க்கெட்டில் 545 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்துள்ளார். 

வெங்காயம் ஏலம் விடப்பட்டதில் கிடைத்த தொகையான ரூ. 216-ஐ தேவேந்திர பட்னாவிசுக்கு மணி ஆர்டராக அனுப்பி வைத்துள்ளார். வெங்காயம் கிலோ 51 பைசாவிற்கு விற்பனையாகியுள்ளது. இதில் கமிஷன் போக விவசாயிக்கு ரூ. 216 கிடைத்துள்ளது. இதுதொடர்பாக விவசாயி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களுடைய பகுதியில் வறட்சி போன்ற சூழ்நிலை நிலவுகிறது. என்னுடைய குடும்பத்தை நான் எப்படி நடத்த முடியும், வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்த முடியும்?” என கேள்வியை எழுப்பியுள்ளார். 

“என்னுடைய வெங்காயம் மிகவும் தரம் வாய்ந்ததாக இருந்தும் விலை கிடைக்கவில்லை. எனவே போராட்டத்தின் ஒரு பகுதியாக எனக்கு தரப்பட்ட ரூ. 216-ஐ முதல்வருக்கு அனுப்பி விட்டேன்” என தெரிவித்துள்ளார். வடக்கு மராட்டியத்தில் உள்ள நாசிக்தான் இந்தியாவின் வெங்காய தேவையின் பாதியை பூர்த்தி செய்கிறது. 

Next Story