உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு - பிரதமர் நரேந்திர மோடி


உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு - பிரதமர் நரேந்திர மோடி
x
தினத்தந்தி 10 Dec 2018 1:16 PM GMT (Updated: 10 Dec 2018 1:22 PM GMT)

உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


புதுடெல்லி,

மத்திய அரசுடன் அதிகார மோதல் தொடர்பான பிரச்சினை இருந்து நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் திடீரென பதவி விலகியுள்ளார்.
 
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அடுத்து ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. மத்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நியமனம் செய்த வாரியக் குழுவின் அதிகாரம் உயர்ந்ததாக குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால் இருதரப்பு இடையேயும் மறைமுகமாக மோதல் காணப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்திய அரசை விமர்சனம் செய்தார். “ரிசர்வ் வங்கிக்குரிய சுதந்திரத்தை மத்திய அரசு மதிப்பது கிடையாது. அதற்கான உரிய விலை கொடுப்பார்கள் என்று விரால் ஆச்சார்யா கூறினார்.

 இதற்கிடையே மத்திய அரசு நிதிப்பற்றாக்குறையை சரிசெய்ய ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை கேட்டு அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியது. இதனால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேலுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. பல்வேறு மோதல் போக்குக்கு இடையே ரிசர்வ் வங்கியின் வாரியக்குழு கூட்டம் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. அப்போது உர்ஜித் படேல் தன்னுடைய ராஜினாமாவை அறிவிக்கலாம் என தகவல்கள் வெளியாகியது. இதற்கிடையே அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து வாரியக்கூட்டம் சுமூகமாக நடந்தது.

இந்நிலையில் திடீரென உர்ஜித் படேல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் உர்ஜித்படேல் பதவி விலகளுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக உர்ஜித் படேல், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது

உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும் என தெரிவித்துள்ளார். உர்ஜித் படேல் மிகவும் உயர்ந்த திறமை கொண்ட ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். வங்கிகளில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்தி அதனை உறுதி செய்தார். ரிசர்வ் வங்கியின் நிதி நிலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தியவர் மற்றும் ரிசர்வ் வங்கி துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார். 

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, நாட்டுக்காக உர்ஜித் படேல் சேவையாற்றியதை மத்திய அரசு பாராட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். 


Next Story