எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு


எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 9:18 AM GMT (Updated: 18 Dec 2018 9:18 AM GMT)

எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் துவங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவைகளும் முடங்கியுள்ளன.

இந்த நிலையில், இன்று காலை அவை கூடியதும்,   ரபேல் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி அவர்கள் இருந்தனர்.

காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவது தொடர்புடைய பிரச்சினைக்காக அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி பாரதீய ஜனதா உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

இதனால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் அமளி நீடித்ததால், பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், அவை மீண்டும் கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.  இதனை தொடர்ந்து, அவை தலைவர் சுமித்ரா மகாஜன் கூறும்பொழுது, நம்முடைய நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என மற்ற நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன என கூறினார்.  இதன்பின் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோன்று மாநிலங்களவையிலும் தொடர்ந்து அமளி நீடித்தது.  இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் இதுவரையில், திருநங்கைகள் உரிமைகள் பற்றிய ஒரே ஒரு மசோதாவுக்கு நேற்று அவையில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.  தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.

Next Story