உத்தரபிரதேசம்: பசுக்களுக்கு தங்குமிடம் அமைக்க முதல்-மந்திரி உத்தரவு


உத்தரபிரதேசம்: பசுக்களுக்கு தங்குமிடம் அமைக்க முதல்-மந்திரி உத்தரவு
x
தினத்தந்தி 26 Dec 2018 5:23 PM GMT (Updated: 26 Dec 2018 5:23 PM GMT)

உத்தரபிரதேசத்தில் பசுக்களுக்கு தங்குமிடம் அமைக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சி செய்து வருகிறது.

யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பசுக்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று உயர் அதிகாரிகளுடன், யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பசுக்களை உரிய முறையில் பாதுகாப்பது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, ஷெட், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பசு முகாம்களுக்கான மொத்தமுள்ள 16 முனிசிபல் கார்பரேஷனுக்கு தலா ரூ10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பசு முகாம்களை அமைக்க ரூ1.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசு முகாம்களுக்கான நிதி அனைத்தும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

Next Story