சி.பி.ஐ. உள்பட எந்த துறை மீதும் இப்பொழுது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; கபில் சிபல் பேட்டி


சி.பி.ஐ. உள்பட எந்த துறை மீதும் இப்பொழுது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; கபில் சிபல் பேட்டி
x
தினத்தந்தி 30 Dec 2018 7:09 AM GMT (Updated: 30 Dec 2018 7:09 AM GMT)

சி.பி.ஐ. உள்பட எந்த துறை மீதும் இப்பொழுது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என கபில் சிபல் பேட்டியளித்து உள்ளார்.

புதுடெல்லி,

ரூ.3,600 கோடி மதிப்பில் மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக ஹெலிகாப்டர்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கைமாறியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிசெல், துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு கடந்த 4ந்தேதி நாடு கடத்தப்பட்டார்.

அதற்கு அடுத்த நாள் நீதிமன்றம் முன் அவர் ஆஜர் செய்யப்பட்டார்.  இதில் மிசெல்லை 5 நாள் சி.பி.ஐ. விசாரணை காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  அதன்பின் இந்த காவல் 5 நாட்களுக்கும், அதன்பின்னர் 4 நாட்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.  இவர் ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அமலாக்க துறையானது பணபரிமாற்ற மோசடி வழக்கொன்றில் மிசெல்லை கடந்த 22ந்தேதி கைது செய்தது.  அவரை 15 நாள் காவலில் அனுப்ப டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.  இந்நிலையில், மிசெலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி அமலாக்க துறையினர் கடந்த 7 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.  இந்த நிலையில், காவல் முடிந்து நீதிமன்றத்தின் முன் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் நேற்று ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்பின் அமலாக்க துறையினர் நீதிமன்றத்தில் கூறும்பொழுது, மிசெலுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தினை அவர் தவறாக பயன்படுத்தினார் என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி பற்றிய கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என வழக்கறிஞர்களிடம் இடைத்தரகர் மிசெல் துண்டு சீட்டுகளை கொடுத்து அனுப்புகிறார் என்றும் அமலாக்க துறையினர் நீதிமன்றத்தின் முன் குற்றச்சாட்டாக தெரிவித்தனர்.  மிசெல் இத்தாலி நாட்டு பெண்ணின் மகனை பற்றி பேசுகிறார் என்றும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து மிசெலின் அமலாக்க துறை விசாரணைக்கான காவலை 7 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வழக்கறிஞரான கபில்சிபல் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இது அதிர்ச்சி அளிக்கிறது.  சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை ஆகியவற்றின் சார்பில் வாதிட கூடிய அரசு வழக்கறிஞர் எப்படி நீதிமன்றத்திற்கு வந்து அரசியல் விளையாட்டை விளையாட முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அவர் பிரதமர் உத்தரவின்படி செயல்படுகிறார்.  எங்களுக்கு இப்பொழுது சி.பி.ஐ. உள்பட எந்த துறை மீதும் நம்பிக்கை இல்லை என கூறியுள்ளார்.

Next Story