பிரதமர் மோடி திமுகவை கூட்டணிக்கு அழைக்கவில்லை ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்


பிரதமர் மோடி திமுகவை கூட்டணிக்கு அழைக்கவில்லை ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்
x
தினத்தந்தி 11 Jan 2019 8:26 AM GMT (Updated: 11 Jan 2019 9:13 AM GMT)

பிரதமர் மோடி திமுகவை கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

நேற்று தமிழக பாஜக உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடினார். அப்போது  பிரதமர் மோடி தமிழகத்தில் வைக்க போகும் தேர்தல் கூட்டணி குறித்து விளக்கம் அளித்தார்.

அதில், தமிழகத்தில் பாஜக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. பழைய நண்பர்களை இணைத்துக்கொள்ள தயார்; வாஜ்பாய் வழியில் தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்று மோடி குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில், மோடி வாஜ்பாய் அல்ல; பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது. பாஜகவில் தேசிய ஜனநாயக கூட்டணி நல்ல கூட்டணி கிடையாது. அதில் எந்த புனிதமும் கிடையாது என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதையடுத்து ஸ்டாலினின் கூட்டணி கருத்திற்கு  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார். டெல்லி பாஜக தேசியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டபின் அவர் பேட்டி அளித்தார்.

அப்போது  லோக்சபா தேர்தலுக்கு ஆயத்தமாவது பற்றி பாஜக தேசியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டணி பற்றி தற்போதைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

பிரதமர் மோடி திமுகவை கூட்டணிக்கு அழைக்கவில்லை. கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியது திமுகவுக்கு அல்ல.

வாஜ்பாய் பாணியில் கூட்டணி என கூறியதை திமுகவுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக்கொண்டார்? அவர்தான் பாஜகவின் கூட்டணிக்கு ஆசைப்படுகிறார் போல, என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Next Story