கர்நாடக அரசியலில் மீடியாக்கள்தான் பிரச்சனைகளை உருவாக்குகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு


கர்நாடக அரசியலில் மீடியாக்கள்தான் பிரச்சனைகளை உருவாக்குகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Jan 2019 8:59 AM GMT (Updated: 28 Jan 2019 8:59 AM GMT)

கர்நாடக அரசியலில் மீடியாக்கள்தான் பிரச்சனைகளை உருவாக்குகிறது என சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையின் கீழ் நடைபெற்று வருகிறது. ஆட்சி தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சனைகள் தலையெடுத்து வருகிறது. மந்திரி பதவி விவகாரம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து வேறுபாடு, கூட்டணியில் அவ்வப்போது சர்ச்சையென பிரச்சனைகள் இருந்து வருகிறது. மறுபுறம் ஆட்சியை அமைக்க பா.ஜனதா ஆப்ரேஷன் தாமரையை முன்னெடுக்க முயற்சி செய்கிறது. 

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கூறியது சர்ச்சையாகியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையாதான் முதல்வர் என்று கூறி வருகின்றனர். அவர்கள் எல்லை கடந்து செல்கிறார்கள். அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ், தனது எம்.எல்.ஏ.க்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றார் குமாரசாமி. 

இதற்கு பதில் அளித்துள்ள  கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா,  சித்தராமையா சிறந்த முதல்வர் ஆவார். அவர் எங்கள் தலைவர். எம்.எல்.ஏ.க்கள் அவரை (சித்தராமையா) தங்களுக்கான முதல்வர் என  அவர்களது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் என்ன தவறு?. இருப்பினும் அவருடன் (கர்நாடக முதல்வர் குமாரசாமி) இருப்பதற்கு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம் என கூறினார்.

சித்தராமையா பேசுகையில்,  சித்தராமையாதான் எங்களுடைய தலைவர் என எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர். நீங்கள்தான் (மீடியாக்கள்) பிரச்சனையை உருவாக்குபவர்கள். நீங்கள் ஒருவரிடம் பேசுகிறீர்கள், பின்னர் ஒவ்வொருவரிடமும் பேசுகிறீர்கள். இங்கு எந்தஒரு பிரச்சனையும் கிடையாது. நான் குமாரசாமியிடம் பேசுவேன் என்றார். இதற்கிடையே மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாக மீடியாக்களிடம் பேசக்கூடாது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக நாம் ஒன்றாக இணைந்துள்ளோம். கட்சியின் உயர்மட்ட விருப்பத்திற்கு எதிராக பேசுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது கிடையாது. இதுபோன்ற சம்பவங்கள் கூட்டணியில் குளறுபடியை தான் ஏற்படுத்தும் என கூறினார். 

Next Story