காஷ்மீரில் 40 வீரர்கள் பலி: உங்களை போல எனது இதயமும் பற்றி எரிகிறது - பீகார் விழாவில் மோடி உருக்கம்


காஷ்மீரில் 40 வீரர்கள் பலி: உங்களை போல எனது இதயமும் பற்றி எரிகிறது - பீகார் விழாவில் மோடி உருக்கம்
x
தினத்தந்தி 18 Feb 2019 12:00 AM GMT (Updated: 17 Feb 2019 9:43 PM GMT)

காஷ்மீரில் 40 வீரர்கள் பலியான சம்பவத்தில், உங்களை போல எனது இதயமும் பற்றி எரிகிறது என பீகார் விழாவில் மோடி தெரிவித்தார்.

பாட்னா,

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானதால், உங்கள் இதயத்தில் பற்றி எரிகிற தீ எனது இதயத்திலும் இருக்கிறது என்று பீகாரில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமுடன் பேசினார்.

பீகார் மாநிலம், பரானியில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

அவற்றில் முக்கியமானவை, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பாட்னா மெட்ரோ ரெயில் திட்டம், பாட்னா ஆற்றுப்படுகை மேம்பாட்டு திட்டம், பாட்னா நகர கியாஸ் வழங்கும் திட்டம், சப்ரா மற்றும் புர்னியா நகரங்களில் மருத்துவ கல்லூரி தொடங்கும் திட்டம், பகல்பூம் மற்றும் கயா நகரங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்தும் திட்டம் ஆகியவை ஆகும்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பேச்சின் தொடக்கத்தில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானதை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர், “புலவாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த பீகார் வீரர்கள் சஞ்சய்குமார் சின்கா, ரத்தன்குமார் தாக்குர் ஆகியோருக்கு என் வீர வணக்கம். என் புகழ் அஞ்சலி. அவர்களை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கு என் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

மேலும், “ இந்த தருணத்தில் உங்கள் இதயங்களில் பற்றி எரிகிற தீ, என் இதயத்திலும் இருக்கிறது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் உருக்கமுடன் கூறினார்.

அதைத் தொடர்ந்து ரூ.33 ஆயிரம்கோடியில் பீகாரில் நிறைவேற்றப்படுகிற திட்டப்பணிகள் பற்றி விளக்கினார். அப்போது அவர், “பாரதீய ஜனதா கூட்டணி அரசின் வளர்ச்சி திட்டங்கள் 2 பக்கங்களை கொண்டது. ஒன்று, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகும். மற்றொன்று சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரை கை தூக்கி விடுதல் ஆகம். நீங்கள் ஒரு வலுவான, நிலையான அரசை தேர்ந்தெடுத்ததால்தான் இதெல்லாம் சாத்தியமானது. இத்தகைய அரசுதான் விரைவான முடிவு எடுக்க முடியும். அவற்றை செயலாக்க உழைக்க முடியும். கனவை நனவாக்க முடியும்” என்று கூறினார்.

மத்திய பட்ஜெட்டில் அறிவித்த விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் நிதித்திட்ட உதவி குறித்தும் பிரதமர் மோடி குறிப்பிட தவறவில்லை. இந்த நிதி உதவி, ஏழை விவசாயிகளின் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என அவர் கூறினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி பேசும்போது, “இந்த திட்டமானது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பாதிக்காத வகையில் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்தார்.

பீகார் விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்றார்.

அங்கு ஹசாரிபாக்கில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டு, ரூ.3 ஆயிரத்து 306 கோடி மதிப்பிலான சுகாதாரம், கல்வி, குடிநீர் வினியோகம், துப்புரவு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஹசாரிபாக், ராம்கார் நகரங்களில் கிராப்புற குடிநீர் வினியோக திட்டங்களை அவர் தொடங்கியும் வைத்தார். ஹசாரிபாக், தும்கா, பலாமு மருத்துவக்கல்லூரிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நகரங்களில் 400 படுக்கைகளுடனான மருத்துவமனைகளுக்கு அவர் அடிக்கல்லும் நாட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு முறை நான் இங்கு வரும்போதும் முந்தைய சாதனையை முறியடிக்கிற வகையில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த மக்களின் ஆசிதான், அவர்களின் முன்னேற்றத்துக்காக இரவு, பகல் பாராமல் என்னை உழைக்க வைக்கிறது” என கூறினார்.

மேலும், ‘இ-நம்’ திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட விவசாயிகளுக்கு செல்போன் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரத்துக்கான காசோலை வழக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 27 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும்போது, “செல்போன் மூலம் விவசாயிகள் ஆன்-லைன் பண பரிமாற்றத்தின் நன்மையை அடைவார்கள். பருவநிலை மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்வார்கள். சாகுபடி செய்வது தொடர்பான தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வார்கள். அரசு திட்டங்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்திக்கொள்வார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story