தேசிய செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம் + "||" + Let's expose the connection to the terrorist attack: Pakistan can not provide evidence - India Definitively

பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்

பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்
பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது. பாகிஸ்தானின் தொடர்பை அம்பலப்படுத்துவதே எங்களது முக்கிய நோக்கம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றுக் கொண்டது. இருப்பினும், அதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா அளித்தால், சதிகாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார்.


இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசில் நிலவும் எண்ணத்தை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்தது. ஆனால், குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பதன்கோட் விமான தளத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக நேரில் வந்து ஆய்வு நடத்த பாகிஸ்தான் விசாரணை குழுவை அனுமதித்தோம். ஆனால், தங்கள் நாட்டுக்கு திரும்பிய பாகிஸ்தான் குழு, இந்தியா ஆதாரம் அளிக்க தவறி விட்டதாக கூறியது.

பாகிஸ்தான் இத்தகைய முறையில் நடந்து கொள்ளும்போது, அதனிடம் ஆதாரங்களை அளிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, ஆதாரம் அளிப்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை.

அதற்கு பதிலாக, எங்கள் நட்பு நாடுகளிடம் அந்த ஆதாரங்களை அளித்து, பாகிஸ்தானின் முகமூடியை கிழித்து எறிவோம். புலவாமா தாக்குதல் உள்பட இந்திய மண்ணில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் பாகிஸ்தானின் தொடர்பை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதே எங்களது முக்கிய பணி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலால் இரு நாட்டு உறவு மேலும் சீர்குலைந்துள்ளது. இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றன. மேலும் இந்த தாக்குதலுக்கு பழி தீர்க்கப்படும் என இந்திய தலைவர்களும், பாதுகாப்பு படையினரும் சூளுரைத்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கவலை வெளியிட்டு உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறியுள்ளார். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அங்கு நிலவி வரும் பதற்றத்தை குறைக்க உடனடி நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொள்ளுமாறும் குட்டரஸ் கூறியதாக ஸ்டீபன் தெரிவித்தார்.

முன்னதாக காஷ்மீர் தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறியதாவது:-

மும்பை தாக்குதல், பதன்கோட் தாக்குதல் தொடர்பாக இந்தியா ஆதாரங்கள் அளித்தும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. இருப்பினும், இம்ரான் கான் புதியவர் என்பதால், அவர் எப்படி செயல்படுகிறார் என்று பார்ப்பதற்காக அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆதாரங்களை அவரிடம் அளிக்க வேண்டும்.

போர் மூள்வது இரு நாடுகளுக்கும் நல்லதல்ல. பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.