பிரதமர் மோடியை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு விஜயசாந்தி பேசியதால் சர்ச்சை


பிரதமர் மோடியை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு விஜயசாந்தி பேசியதால் சர்ச்சை
x
தினத்தந்தி 10 March 2019 3:42 AM GMT (Updated: 10 March 2019 3:42 AM GMT)

”மோடி பயங்கரவாதி போல் இருக்கிறார்” என்று ராகுல் காந்தி முன்னிலையில் விஜயசாந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஐதராபாத்,

தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய, அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் பிரபல நடிகையுமான விஜயசாந்தி, மோடியை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த விஜயசாந்தி மேலும் கூறுகையில், “ எந்த நிமிடத்தில் எந்த குண்டை மோடி போடப் போகிறார் என்று அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மோடி பயங்கரவாதி போல தோற்றமளிக்கிறார். தனது மக்களை நேசிப்பதற்கு பதிலாக, அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறார். பிரதமருக்கான பண்புகள் இது இல்லை” என்றார். பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை மோடி மேற்கொண்டதை சுட்டிக்காட்டும் வகையில் விஜயசாந்தி இவ்வாறு கூறியதாக தெரிகிறது. 

விஜயசாந்தியின் இந்த கருத்துக்கள் சமூகவலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளன. முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை மிகவும் தரக்குறைவாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, மணிசங்கர் அய்யர் கட்சியில் இருந்து எட்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். எனவே, விஜயசாந்தி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எதுவும் எடுக்குமா? என்பதையும் சமூக வலைதளங்களில் கேள்வியாக எழுப்பி வருகின்றனர். 

விஜயசாந்தியின் சர்ச்சைக்குரிய கருத்து  குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாரதீய ஜனதா கட்சி, ”பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்காக உண்மையில் காங்கிரஸ் தனது கவலையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறது”என தெரிவித்துள்ளது. 

சம்ஷாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜயசாந்தி மேலும் கூறுகையில், வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு இடையே நடைபெறும் யுத்தம் ஆகும். ஜனநாயகம் வாழ்வதற்காக ராகுல் காந்தி போராடுகிறார். சர்வாதிகாரி போல மோடி ஆட்சி செய்கிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, புல்வாமா தாக்குதல் என மோடி மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கிறார்” என்றார். 

Next Story