பாஜக தொப்பியை அணிய மறுத்த அமித்ஷா பேத்தி! சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது


பாஜக தொப்பியை அணிய மறுத்த அமித்ஷா பேத்தி! சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது
x
தினத்தந்தி 30 March 2019 10:44 AM GMT (Updated: 30 March 2019 10:44 AM GMT)

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பேத்தி, பாஜக சின்னம் இடம் பெற்ற தொப்பியை அணிய மறுத்து அடம் பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகின்றன.

அகமதாபாத்,

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தனது பேத்திக்கு பாஜக  தொப்பியை தலையில் அணிவிக்க முயற்சித்தபோது அந்த தொப்பியை கீழே எடுத்துப்போட்டு விட்டு வேறு தொப்பியை கேட்டு வாங்கி அணிந்து கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். குஜாரத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் அமித்ஷா இன்று அகமதாபாத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

முன்னதாக வேட்புமனுத் தாக்கலுக்கு முன், அமித்ஷா பேரணியில் பங்கேற்று அதன்பின் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அகமதாபாத் நகருக்கு இன்று வந்த அமித் ஷாவுக்கு பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அமித்  ஷாவை வரவேற்க அவரின் குடும்பத்தினரும் காத்திருந்தனர் அப்போது அங்கு நின்றிருந்த தனது குடும்பத்தார் வைத்திருந்த தனது பேத்தியை தூக்கி அமித் ஷா கொஞ்சினார். அதன்பின் அந்த குழந்தை தலையில் சாதாரண தொப்பி அணிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தொப்பியை கழற்றிய அமித் ஷா பாஜகவின் தாமரை சின்னம் பொறித்த தொப்பியை தனது பேத்திக்கு அணிவித்தார்.

ஆனால், அந்தக் குழந்தை, அமித் ஷா அணிவித்த பாஜக தொப்பியை அணிய மறுத்து மூன்றுமுறை தலையில் இருந்து கழற்றியது. அதன்பின் குழந்தை தான் முதலில் அணிந்திருந்த தொப்பியை அணிவித்ததும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமித் ஷாவின் பேத்திக்கே பாஜகவின் தொப்பி பிடிக்கவில்லை என பல தரப்பினரும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

Next Story