இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை: அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து நடத்தப்பட்டுள்ளது- இஸ்ரோ


இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை: அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து நடத்தப்பட்டுள்ளது- இஸ்ரோ
x
தினத்தந்தி 3 April 2019 6:23 AM GMT (Updated: 3 April 2019 7:13 AM GMT)

இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து நடத்தப்பட்டுள்ளது என இஸ்ரோ கூறி உள்ளது.

புதுடெல்லி

கடந்த புதன்கிழமை  நடந்த சோதனை மூலம்  ஆபத்து ஏற்படுத்தும் செயற்கைகோளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா தற்போது இடம் பிடித்துவிட்டது. புவி வட்டப்பாதையில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கொண்டு இருக்கும் செயற்கைகோளை குறிபார்த்து சுட்டு வீழ்த்துவது என்பது, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த ஒரு தோட்டாவை 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மற்றொரு தோட்டாவால் சுட்டு நாசமாக்கும் திறனுக்குச் சமம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே தற்போது இத்தகைய வல்லமையைப் பெற்றுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையைப் பெற்றுள்ள நான்காவது நாடாகியுள்ளது.

20-22 கி.மீ. உயரம் வரையில் உள்ள புவிமண்டலத்துக்கு உட்பட்ட தூரத்திலோ, புவி மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூரத்தில் உள்ள இலக்குகளையோ இந்த ஏவுகணையால் தாக்க முடியும்.

இந்த தகவலை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். 

ஆனால் இந்த செயற்கை ஏவுகணை சோதனை மூலம் விண்வெளியில் உருவாகும் குப்பைகள் மற்ற செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக  இருக்கும் என கூறப்பட்டது. தற்போது இந்த சோதனை மூலம் உருவாகி உள்ள குப்பைகளால் சர்வதேச நிலையத்துக்கு விண்வெளி நிலைபாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன்  நாசா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர்  கூறியதாவது:

''விண்வெளியில் தங்களின் செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக, இந்தியா ஏ-சாட் எனும் ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை தாக்கி அழித்து நடத்திய சோதனை உண்மையில் பயங்கரமானது. ஏவுகணை அழித்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள் விண்வெளியில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன. இதுவரை 60 பாகங்களைக் கண்டுபிடித்துள்ளோம். 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறது.

இதுபோன்ற செயல்கள், மனிதர்கள் விண்வெளியில் எதிர்காலத்தில் பயணிப்பதற்கு உகந்ததாக இருக்காது.. விண்வெளியில் மிதக்கும் பாகங்களில் பெரும்பாலானவை 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக, பெரியளவில் இருக்கிறது. இந்த பாகங்களால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்தான சூழல் இருக்கிறது.

இந்தியாவின் ஏ-சாட் ஏவுகணைச் சோதனை நடவடிக்கைகள், மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வுகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்கள் நடக்கும்போது, விண்வெளியில் இருக்கும் மற்ற செயற்கைக்கோள்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும்.

ஒருநாடு இதுபோன்று சோதனை செய்யும் போது, மற்ற நாடுகளும் நாங்களும் இதுபோன்ற சோதனையைச் செய்கிறோம் என்று இறங்கினால், விண்வெளி என்ன ஆவது? இதை ஏற்க முடியாது. எங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புவரும் என்பது குறித்து நாசா தெளிவாக இருக்கிறது.

விண்வெளியில் மிதந்து வரும் செயற்கைக்கோள் குப்பைகள் குறித்து ஒவ்வொரு மணிநேரமும் நாசா தகவல்களைச் சேகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் இருந்து நாங்கள் செய்த ஆய்வின்படி,  இந்த உடைந்த பாகங்கள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து கடந்த வாரத்தில் இருந்து 44 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், பூமியின் குறைந்த சுற்று வட்டப் பாதையில் இருப்பவை அடுத்த 10 நாட்களுக்குள் சிதைந்துவிடலாம்.

கடந்த 2007-ம் ஆண்டு இதேபோன்ற சோதனையை சீனா மேற்கொண்டது. சீனா தகர்த்த செயற்கைக்கோளின் பாகங்கள் இன்னும் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது. விண்வெளியில் இத்தகைய செயல்களுக்கு இதுபோன்ற  சோதனை மேற்கொள்ளும் நாடுகள்தான் பொறுப்பு.

விண்வெளியில் உள்ள சூழல் குறித்து அறிந்து, நாடுகள் பொறுப்புடனும், விண்வெளி போக்குவரத்து மேலாண்மை குறித்தும் அறிந்து நடக்க வேண்டும். விண்வெளி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்''. இவ்வாறு பிரிடென்ஸ்டைன் தெரிவித்தார்.

இந்த நிலையில், நாசாவின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரோ பதிலளித்துள்ளது. இஸ்ரோ தலைவரின் மூத்த ஆலோசகர் தபன் மிஸ்ரா மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, ``சில நேரங்களில் நல்ல நண்பர்கள்கூட நமது வீட்டுத் திருமணங்களில் வந்து குறை சொல்வார்கள். உணவு சரியில்லை... அது சரியாக இல்லை என்றெல்லாம் கூறுவார்கள். நாம் புதிதாக ஒரு முயற்சி செய்யும்போது அனைத்து நேரங்களிலும் நமக்கு மாலைகள் கிடைப்பது கிடையாது. மிஷன் சக்தியின் பரிசோதனை விண்வெளியில் 300 கிலோமீட்டர் தூரத்தில்தான் நடைபெற்றது. அங்கு காற்றின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் 6 மாதத்தில் அவை தானாக அழிந்துவிடும். 

மத்திய பாதுகாப்புத் துறையின் டி.ஆர்.டி.ஒ நடத்திய இந்தச் சோதனை ஒரு வெடிப்பு கிடையாது. ஒரு புல்லெட் தாக்கியதுபோல்தான் இது தாக்கும். சீனா 2007-ம் ஆண்டு இந்தப் பரிசோதனையை 800 கிலோ மீட்டர் தூரத்தில் செய்தது. அங்கு காற்றின் அழுத்தம் இருக்காது. அதனால் அந்தக் குப்பைகள் இன்னும் மிதந்துகொண்டிருக்கிறது. இந்திய விஞ்ஞானிகளின் திறன் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான். அவர்கள் சரியான விதத்தில் இந்தச் சோதனையை நிகழ்த்தியதாக உறுதிப்பட சொல்ல முடியும். அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எந்த விதத்திலும் அவமானம் நேரும் வகையில் இது செய்யப்படவில்லை. 

விண்வெளியில் ஏற்கனவே குப்பைகள் இருக்கிறது. அனைத்து நாடுகளும் அதை ரேடார், கேமரா மற்றும் தொலைநோக்கு கருவிகளின் உதவிகளுடன் கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற பாகங்களின் மீது செயற்கைக்கோள் மோதும் சூழல் உருவானால், செயற்கைக்கோளின் திசையை மாற்றிவிட முடியும். விண்வெளியில் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தியா எப்போதும் செயல்பட்டது கிடையாது” என முடித்தார்.

Next Story