தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Jun 2019 11:00 PM GMT (Updated: 26 Jun 2019 10:17 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, தி.மு.க. எம்.பி. கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பேசினார்.

அப்போது அவர், ‘தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய அப்பாவி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில், படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி அன்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் ஒரு போலீஸ் அதிகாரியின் பெயர்கூட முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை. தூத்துக்குடி மக்கள் நீதி கிடைக்காமல் உள்ளனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூட இந்த சம்பவத்தை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. ஆனால் தமிழக அரசு நியாயமான நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான இழப்பீடு வழங்கவில்லை.

எனவே, தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.


Next Story