தபால் துறை தேர்வு ரத்து; மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
கடந்த ஜூலை 14ல் நடந்த தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் தபால்துறை சார்பில், தபால் அலுவலர் மற்றும் தபால் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கடந்த ஞாயிற்று கிழமை எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான கேள்விகள் அனைத்தும், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும் என்று தபால்துறை அறிவிப்பு வெளியிட்டது.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வரை பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது சிரமம். எனவே, இந்த தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், பழைய அறிவிப்பின் படி தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்யப்பட்டது.
மதுரை உயர் நீதிமன்ற கிளை இந்த வழக்கை கடந்த 13ந்தேதி இரவு 9 மணிக்கு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு மற்றும் மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு தங்களது இல்லத்தில் வைத்து வழக்கை விசாரணை செய்தது. முடிவில், தபால்துறை தேர்வை 14ந்தேதி நடத்தலாம். ஆனால், இந்த கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை முடிவுகளை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து மத்திய அரசு வருகிற 19ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், ஆங்கிலம், இந்தியில் தேர்வுகள் நடைபெறுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்ற மேலவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த ஜூலை 14ல் நடந்த தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story