முகநூல் பதிவுக்காக கைதான மாணவிக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன்


முகநூல் பதிவுக்காக கைதான மாணவிக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன்
x
தினத்தந்தி 17 July 2019 8:43 PM GMT (Updated: 17 July 2019 8:43 PM GMT)

முகநூல் பதிவுக்காக கைதான மாணவிக்கு, நூதன நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரிச்சா பாரதி(வயது 19). கல்லூரி மாணவி. முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய சமூக வலைத்தள பதிவை தனது முகநூல் பக்கத்தில் ரிச்சா பாரதி பகிர்ந்தார். அந்த கருத்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அதை பகிர்ந்த மாணவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அஞ்சுமான் கமிட்டி சார்பில் பித்தோரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 12-ந் தேதி ரிச்சா பாரதியை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனிஷ்குமார் சிங், ‘குர்ஆன் புனித நூலை 5 பிரதிகள் எடுத்து ஒன்றை, அஞ்சுமான் கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும். மற்ற 4 பிரதிகளை நகரில் உள்ள வெவ்வேறு பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு வழங்க வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை வரவேற்பதாக அஞ்சுமான் கமிட்டி உறுப்பினர் எம்.டி.ஜமில் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிச்சா பாரதி கூறுகையில், ‘நான் இன்னும் உத்தரவு நகலை பெறவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை. மேலும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாமா என்பது குறித்து எனது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களை கேட்டு முடிவு செய்வேன்’ என்றார்.


Next Story