ஆகஸ்ட் 20-ந் தேதி சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் -இஸ்ரோ


ஆகஸ்ட் 20-ந் தேதி சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் -இஸ்ரோ
x
தினத்தந்தி 24 July 2019 10:33 AM GMT (Updated: 24 July 2019 11:23 AM GMT)

ஆகஸ்ட் 20-ந் தேதி சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

பெங்களூரு,

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினர். சந்திரயான் 2 விண்கலத்தை  கடந்த 22-ந் தேதி மதியம் 2.43 மணிக்கு  வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி  சந்திரயான்-2 விண்கலத்தை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

புவி வட்டப்பாதையிலிருந்து நிலவின் வட்டப்பாதைக்கு செல்லும் பணிகளை சந்திரயான்-2 இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 14-ந் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து நிலவை நோக்கி சந்திரயான்-2 புறப்படும். ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும்  என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story