‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை கைவிடக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம்


‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை கைவிடக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 25 July 2019 11:41 PM GMT (Updated: 25 July 2019 11:41 PM GMT)

‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை கைவிடக்கோரி தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை முதல்–அமைச்சர் ஆதரவு தெரிவித்தார்.

புதுடெல்லி, 

தமிழகம் மற்றும் புதுவையில் பேரழிவை ஏற்படுத்தும் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இதில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் மத்தியில் பேசிய நாராயணசாமி கூறுகையில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று புதுவை சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி உள்ளோம். பெட்ரோலியத்துறை மந்திரியை சந்தித்தும் அழுத்தம் கொடுக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ராணுவத்தை அழைத்து வந்தாலும் அதை எதிர்க்க தயாராக உள்ளோம்’ என்றார்.

மேலும், புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், செ.ராமலிங்கம், சண்முகம், வில்சன், மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. வெங்கடேசன் ஆகியோரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை கைவிட வலியுறுத்தி இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


Next Story