கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு அக்டோபர் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: டெல்லி கோர்ட்டு உத்தரவு


கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு அக்டோபர் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: டெல்லி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Aug 2019 10:19 PM GMT (Updated: 2 Aug 2019 10:29 PM GMT)

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக, கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வருகிற அக்டோபர் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசியதாக அவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களிலும், கோர்ட்டுகளிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்துசேனா அமைப்பின் சார்பில் அதன் தலைவர் விஷ்ணு குப்தா என்பவர், “கமல்ஹாசன் இந்துக்களின் மனதை புண்படுத்தி பேசி உள்ளார். தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக மதத்தை வைத்து ஆதாயம் தேடும் நோக்கில் பிரசாரம் செய்திருக்கிறார். எனவே அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரி டெல்லி பட்டியாலா ஹவுஸ் பெருநகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த மே 16-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேவையான ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி ஆகஸ்டு 2-ந்தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி பட்டியாலா ஹவுஸ் பெருநகர கோர்ட்டு நீதிபதி சுமித் ஆனந்த் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், வாக்குமூலம் கொடுப்பதற்கு மனுதாரர் நேரில் ஆஜர் ஆகாததாலும், மனுதாரர் தரப்பு வக்கீல் மேலும் கால அவகாசம் கோரியதாலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story