அரசியல் சட்ட நகலை கிழிக்க முயன்ற 2 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றம் - வெங்கையா நாயுடு உத்தரவு


அரசியல் சட்ட நகலை கிழிக்க முயன்ற 2 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றம் - வெங்கையா நாயுடு உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2019 12:31 PM IST (Updated: 6 Aug 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

அரசியல்சட்ட நகலை கிழிக்க முயன்ற மக்கள் ஜனநாயக கட்சியின் 2 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்வது மற்றும் மாநிலத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பான சட்டரீதியான தீர்மானத்தை வாசித்தார். அப்போது ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மைய பகுதியில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காஷ்மீரை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் நசீர் அகமது லாவேய், மிர் முகமது பயாஸ் ஆகியோர் அரசியல்சட்ட நகலை கிழிக்க முயன்றனர்.

இதனால் கோபம் அடைந்த அவை தலைவர் வெங்கையா நாயுடு, அவை பாதுகாவலர்களிடம் இரு உறுப்பினர்களின் பெயர்களையும் கூறி அவர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டார். அதன்படி அவை பாதுகாவலர்கள் அந்த 2 எம்.பி.க்களையும் அவையில் இருந்து வெளியேற்றினார்கள்.

தொடர்ந்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, அந்த 2 உறுப்பினர்களுக்கும் கண்டனம் தெரிவித்ததுடன், அவையில் உறுப்பினர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத்தும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் 2 பேரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

வெளியேற்றப்பட்ட 2 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Next Story