காங்கிரஸ் கட்சிக்கு அடிமை போல வேலை பார்த்தேன்: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி


காங்கிரஸ் கட்சிக்கு அடிமை போல வேலை பார்த்தேன்: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி
x
தினத்தந்தி 6 Aug 2019 2:54 PM IST (Updated: 6 Aug 2019 2:54 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சிக்கு அடிமை போல வேலை பார்த்தேன் என்று கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ் தயவுடன் கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி ஆட்சி அமைத்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்வதாக அறிவித்து, அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, ஏற்பட்ட அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களால்   குமாரசாமி ஆட்சி பெரும்பான்மையை காட்ட முடியாமல் ஆட்சியை பறிகொடுத்தது. 

இதையடுத்து,  கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த  கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி கூறியதாவது:- “ அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் நான் முழு சுதந்திரம் அளித்தேன். மாநகராட்சி மேயர்களுக்கு கூட நான் முழு சுதந்திரம் அளித்து இருந்தேன்.   கடந்த 14 மாதங்களாக இந்த எம்.எல்.ஏக்களுக்கும், எங்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் அடிமை போல பணியாற்றினேன். பிறகு ஏன்  அவர்கள் என்னை குற்றம் சாட்டுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. 

எம்.எல்.ஏக்கள்  தங்கள் தொகுதிகளில் ஏதேனும் கோரிக்கையுடன் என்னைத்தேடி வந்தால், உடனடியாக அதை நிறைவேற்றி கொடுத்தேன்.  உரிய அனுமதி கூட பெறாமல் என்னை எம்.எல்.ஏக்கள் சந்திப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர். கடந்த காங்கிரஸ் அரசு செயலாற்றாத நிலையில், நான் உடனுக்குடன் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தேன். முதல் மந்திரி பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், நான்  தற்போது மகிழ்ச்சி மிக்க நபராக உள்ளேன். இன்றைய அரசியல் நல்லவர்களுக்கானதாக இல்லை. வெறுப்பு,சாதி சார்ந்த அரசியல் தற்போது உள்ளது” என்றார். 

Next Story