காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் திட்டம்


காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் திட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2019 9:53 AM GMT (Updated: 16 Aug 2019 9:53 AM GMT)

காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் தீவிரமடைந்துள்ளதாகவும், மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் போன்ற பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்து இருந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், தனது ட்விட்டர் பதிவில், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேரும், இந்திய வீரர்கள் 5 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த், பாகிஸ்தானின் தகவல் அடிப்படையற்றது மற்றும் கற்பனையானது என தெரிவித்தார்.

இந்த நிலையில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகள் விரைவில் தொடங்குவதால், பாகிஸ்தான் பாதிக்கப்பட்டவர்கள் போல் நாடகமாடுகிறது.  மேலும்  'போர்நிறுத்த மீறல்கள் அதிகரிப்பது உரிய கவனத்தை ஈர்க்கக்கூடும்' என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் உள்ளது என இந்திய ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளதாகவும்,  காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

Next Story