இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சூசகம்


இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சூசகம்
x
தினத்தந்தி 16 Aug 2019 11:00 PM GMT (Updated: 16 Aug 2019 9:44 PM GMT)

இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சூசகமாக உணர்த்தி உள்ளார்.


ஜெய்ப்பூர்,

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதல் நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

அவர் பிரதமராக இருந்தபோது 1998-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளையெல்லாம் அதிரவைத்தார்.

அந்த இடத்துக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று சென்று பார்வையிட்டு, வாஜ்பாய்க்கு நினைவஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்தப் பதிவில் அவர், “இந்தியாவை அணு ஆயுத வல்லமை படைத்த நாடாக மாற்றுவதில் வாஜ்பாய் உறுதியாக இருந்தார். அதற்கு இந்த பொக்ரான் சாட்சியாக அமைந்துள்ளது. எதிரிநாடு அணுகுண்டை கையில் எடுக்காத வரையில், இந்தியாவும் முதலில் அணுகுண்டை கையில் எடுக்காது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதை உறுதியுடன் இந்தியா கடைப்பிடித்தும் வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பது சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும்” என கூறி உள்ளார்.

எனவே சூழ்நிலைகளைப் பொறுத்து இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம் என்பதையே ராஜ்நாத் சிங் சூசகமாக இப்படி கூறி உள்ளார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், “இந்தியா ஒரு பொறுப்புள்ள அணுசக்தி நாடு என்ற தகுதியை அடைந்திருக்கிறது. இது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பெருமை ஆகும். வாஜ்பாயின் மகத்துவத்துக்கு இந்த நாடு என்றும் கடன்பட்டிருக்கும்” எனவும் கூறி உள்ளார்.


Next Story