அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - இம்ரான்கான் மீது மறைமுக குற்றச்சாட்டு


அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - இம்ரான்கான் மீது மறைமுக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Aug 2019 2:51 PM GMT (Updated: 20 Aug 2019 12:07 AM GMT)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

புதுடெல்லி,

காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் நிலையில், பிரதமர் மோடி நேற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக டிரம்பிடம் அவர் கூறும்போது, ‘பிராந்தியத்தின் தற்போதைய சூழலை பொறுத்தவரை, குறிப்பிட்ட சில பிராந்திய தலைவர்களின் (இம்ரான்கான்) மிதமிஞ்சிய பேச்சுகளும், இந்தியாவுக்கு எதிரான வன்முறை போக்குகளும் அமைதிக்கு உகந்தது அல்ல’ என்று தெரிவித்தார்.

பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை விதிவிலக்கின்றி ஒழிப்பதன் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.

பிரதமர் மோடியின் இந்த 30 நிமிட உரையாடலின் போது இரு தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், இந்த பேச்சு இரு தலைவர்களுக்கு இடையேயான சுமுக உறவுகளை வெளிப்படுத்துவதாக இருந்ததாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இம்ரான்கான் ஏற்கனவே டிரம்புடன் பேசியிருந்த நிலையில், பிரதமர் மோடியும் டிரம்புடன் தொலைபேசியில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story