எதிர்க்கட்சி தலைவர்கள் வருகை என்ற தகவலால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவம் குவிப்பு


எதிர்க்கட்சி தலைவர்கள் வருகை என்ற தகவலால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவம் குவிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 6:09 AM GMT (Updated: 24 Aug 2019 6:09 AM GMT)

ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் வேண்டுகோளையும் மீறி எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு செல்லக்கூடும் எனத் தெரிகிறது. இதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370வது பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள் என்று மத்திய அரசு கூறினாலும் அங்கு பெரும்பாலான இடங்களில் இன்னும் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்படவில்லை.

மாநிலத்தை பார்வையிட கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் சென்றபோது ஸ்ரீநகரில் இருந்து திருப்பி விடப்பட்டனர். அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 

ராகுல்காந்தியுடன் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை மாநிலத்துக்குள் வர வேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் வந்து மக்களைச் சந்தித்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் மக்களுக்கு தொந்தரவாக அமையக்கூடும் என்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

 "ஜம்மு காஷ்மீர் மக்களை எல்லை தாண்டிய தீவிரவாதம், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் ஆகியோரின் தாக்குதலில் இருந்து மத்திய அரசு காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாநிலத்தில் தவறான நடவடிக்கைகள், வதந்திகளை பரப்புவது ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு, படிப்படியாக இயல்பு வாழ்க்கை வந்து கொண்டிருக்கிறது.

இப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் இங்கு வந்து மக்களைச் சந்திப்பதால், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் அவர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படலாம் " என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் வேண்டுகோளையும் மீறி எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு செல்லக்கூடும் எனத் தெரிகிறது. இதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story