‘10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பும் கிடையாது’ ஜம்மு காஷ்மீர் ஆளுநர் பேச்சு


‘10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பும் கிடையாது’ ஜம்மு காஷ்மீர் ஆளுநர் பேச்சு
x
தினத்தந்தி 25 Aug 2019 9:25 AM GMT (Updated: 25 Aug 2019 9:25 AM GMT)

இன்டர்நெட் சேவை, மொபைல் சேவையை நிறுத்தியது பள்ளத்தாக்கு பகுதியில் உயிர்களை காப்பாற்றுகிறது. '10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் கிடையாது’ என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் கூறியுள்ளார்.



காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த 5-ந் தேதி அறிவித்தது. இதன் காரணமாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவியது. தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாடு கட்சி நிறுவனர் பரூக் அப்துல்லா, தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகிய 3 முன்னாள் முதல்- மந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், காஷ்மீரில் உள்ள பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றன. அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பிவந்ததால், மத்திய அரசு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அறிவித்தது. அதேநேரம் மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து பல்வேறு அமைப்புகள் நடத்திவரும் போராட்டங்கள் காரணமாக மீண்டும் காஷ்மீரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளும் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.

காஷ்மீரில் உள்ள நிலைமையை நேரில் பார்வையிடவும், அங்குள்ள மக்களை சந்திக்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கு செல்வதாக அறிவித்தனர். காஷ்மீரில் நிலைமையை நேரில் பார்வையிடவும், மக்களை சந்திக்கவும் ராகுல் காந்தி தலைமையில் விமானத்தில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். காஷ்மீரில் மறைக்கப்படுவது என்ன? என காங்கிரசை சேர்ந்த ராகுல் காந்தி கேள்வியை எழுப்பினார்.

இந்நிலையில் இன்டர்நெட் சேவை, மொபைல் சேவையை நிறுத்தியது பள்ளத்தாக்கு பகுதியில் உயிர்களை காப்பாற்றுகிறது. '10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் கிடையாது’ என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் கூறியுள்ளார். "ஜம்மு-காஷ்மீர் 10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் நடந்ததில்லை. தகவல்தொடர்பின்மை உயிரைக் காப்பாற்ற உதவினால், அதிலென்ன தீங்கு?  

கடந்த காலத்தில் காஷ்மீரில் ஏதாவது ஒரு நெருக்கடியான நிலை நேரிட்டாலே சுமார் 50 பேர் முதல்வாரத்திலே உயிரிழக்கும் சம்பவம் நேரிட்டது. இப்போது இந்திய அரசு மனித உயிர்களை இழக்க கூடாது என்ற அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. 10 நாட்களுக்கு மொபைல் போன்கள் சேவை மட்டும் இல்லாமல் இருக்கட்டும், மாநிலத்தில் மிக விரைவில் இயல்புநிலையை உறுதி செய்வோம் என்று சத்தியபால் மாலிக் கூறியுள்ளார். 


Next Story