காஷ்மீரில் “அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை” என்று கவர்னர் தகவல்


காஷ்மீரில் “அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை” என்று கவர்னர் தகவல்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:11 PM GMT (Updated: 25 Aug 2019 10:14 PM GMT)

காஷ்மீரில் தொலைபேசி சேவை சீரடைந்தது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கவர்னர் கூறினார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிராக வதந்திகளை கிளப்பி, வன்முறைக்கு வித்திடக்கூடும் என்பதால், அங்கு நிறைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தொலைபேசி சேவை ரத்து செய்யப்பட்டது.

சமீப நாட்களாக காஷ்மீரில் இயல்புநிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தொலைபேசி இணைப்பகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கின. அதனால், சாதாரண தொலைபேசி சேவை, பெரும்பாலான இடங்களில் சீரடைந்தது. வர்த்தக பகுதியான லால் சவுக் பகுதியில் நிலைமை இன்னும் சீரடையவில்லை. சில பகுதிகளில், தொலைபேசி இணைப்புகளை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்தது.

இருப்பினும், மொபைல்போன் சேவை, மொபைல் இணையதள சேவை ஆகியவை மீதான கட்டுப்பாடு இன்னும் நீடிக்கிறது. இதனால், மொபைல் சேவையை பயன்படுத்த முடியாதநிலை நிலவுகிறது. பி.எஸ்.என்.எல். அகண்ட அலைவரிசை சேவையும் கிடைக்கவில்லை.

காஷ்மீர் முழுவதும் உள்ள சந்தைகள் 21-வது நாளாக மூடப்பட்டுள்ளன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடவில்லை.

இதற்கிடையே, காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நேற்று டெல்லிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்பெல்லாம் காஷ்மீரில் ஒரு பிரச்சினை எழுந்தால், முதல் வாரத்திலேயே 50 சாவுகள் விழும். ஆனால், சிறப்பு அந்தஸ்தை நீக்கி 20 நாட்களாகியும் ஒரு உயிரிழப்பு கூட நேரவில்லை.

தொலைபேசி சேவை மீதான கட்டுப்பாடுதான், நிறையபேர் உயிரிழப்பதை தடுத்துள்ளது.

காஷ்மீரில் மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பக்ரீத் பண்டிகை அன்று, இறைச்சி, காய்கறி, முட்டை ஆகியவற்றை பொதுமக்களுக்கு வீடுதேடிச்சென்று அளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story