கர்நாடகாவில் 3 துணை முதல்-மந்திரிகள் நியமனம்


கர்நாடகாவில் 3 துணை முதல்-மந்திரிகள் நியமனம்
x
தினத்தந்தி 26 Aug 2019 5:33 PM GMT (Updated: 26 Aug 2019 5:46 PM GMT)

கர்நாடகாவில் 3 பேரை துணை முதல்-மந்திரிகளாக எடியூரப்பா நியமனம் செய்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு செயல்பட்டு வந்தது. கூட்டணியை சேர்ந்த 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கடந்த 26-ந் தேதி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது.

நீண்ட நாட்களாக மந்திரி சபை விஸ்தரிப்பு நடைபெறாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மந்திரி சபை விஸ்தரிக்கப்பட்டது. அதில்  பெண் ஒருவர் உள்பட 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். ஆனால் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், பதவி ஏற்றுக் கொண்ட மந்திரிகளுக்கான துறைகள் இன்று ஒதுக்கப்பட்டன. அவர்களில் துணை முதல்-மந்திரிகளாக கோவிந்த் கர்ஜோல், டாக்டர் அஷ்வத் நாராயண், லக்ஷ்மி சங்கப்பா சாவதி ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொதுப்பணித்துறை, சமூகநலத்துறை ஆகியவை துணை முதல்-மந்திரி கோவிந்த் கர்ஜோலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கர்நாடகா முன்னணி மாநிலமாக உள்ளது. அங்கு அந்த 2 துறைகளையும் வைத்திருக்கும் மந்திரி முக்கிய தலைவராக கருதப்படுகிறார். இந்நிலையில் உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி, அறிவியல் டெக்னாலஜி ஆகியவை துணை முதல்-மந்திரி டாக்டர் அஷ்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு துணை முதல்-மந்திரி லக்ஷ்மண் சங்கப்பா சாவதிக்கு  போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பசவராஜ் பொம்மைக்கு உள்துறையும், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருக்கு தொழில்துறையும், முன்னாள்  சட்டத்துறை மந்திரி சுரேஷ் குமாருக்கு ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, கன்னட மொழி மற்றும் கலாசார துறை சி.டி.ரவிக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை  சசிகலா அன்னாசாகிபுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற துறைகள் அனைத்தும் முதல்-மந்திரி எடியூரப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story