வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வரும் - அதிகாரி தகவல்


வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வரும் - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 15 Sept 2019 4:30 AM IST (Updated: 15 Sept 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

இணைக்கப்பட்ட வங்கிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்படும் என்று வங்கி உயர் அதிகாரி தெரிவித்தார்.

கொல்கத்தா,

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 30-ந் தேதி 10 மாநில அளவிலான வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படும் என்று அறிவித்தார். இதில் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கிகள் இணைக்கப்படுகிறது.

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் இணைக்கப்படும் வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை இணைந்து வாடிக்கையாளர் கூட்டத்தை நேற்று நடத்தின. கூட்டத்தில் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அசோக் குமார் பிரதான் கூறியதாவது:-

வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு சிறிது காலம் ஆகும். இதில் சட்டரீதியான அனுமதி மற்றும் ஒழுங்குமுறை உடன்பாடுகள் தேவைப்படுகிறது. 3 வங்கிகளின் நிர்வாகமும் இணைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். எனவே இணைக்கப்பட்ட புதிய வங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

இடைப்பட்ட காலத்தில் இந்த 3 வங்கிகளும் தொடர்ந்து தனியாகவே செயல்படும். வங்கி இணைப்பு நடவடிக்கையில் ஆட்குறைப்பு செய்வதோ, விருப்ப ஓய்வு திட்டமோ இருக்காது. இணைக்கப்பட்ட பின்னர் எங்கள் வங்கியின் ஊழியர்கள் ஒரு லட்சமாகவும், கிளைகள் 11,400 ஆகவும் இருக்கும்.

இணைக்கப்பட்ட வங்கி புதிய பெயரில் செயல்பட வாய்ப்பு உள்ளது. இணைப்புக்கு பின்னர் இது நாட்டின் 2-வது பெரிய வங்கியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story