காஷ்மீரில் கடைகளை திறக்க பயங்கரவாதிகள் எதிர்ப்பு


காஷ்மீரில் கடைகளை திறக்க பயங்கரவாதிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 Sep 2019 12:12 PM GMT (Updated: 18 Sep 2019 12:12 PM GMT)

காஷ்மீரில் கடைகளை திறக்க பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அரசின் முடிவுக்கு எதிராக வதந்திகள் பரப்பி வன்முறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், அம்மாநில முன்னாள் முதல் மந்திரிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

தற்போது, அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.  ஆனால், இயல்பு நிலை திரும்ப விடாமல் தடுக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் அங்குள்ள மக்களை மிரட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று திறந்திருக்கும் கடைகளை  மூடுமாறு  மிரட்டுவதும்,  கடை உரிமையாளர்களை கடைகளை இனி திறக்கக்கூடாது என்றும் பயங்கரவாதிகள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. 

மேலும், முக்கிய இடங்களில் கைகளால் எழுதப்பட்ட பதாகைகளையும் , டைப் செய்யப்பட்ட போஸ்டர்களையும் அரசுக்கு எதிராக பயங்கரவாதிகள் ஒட்டியுள்ளனர்.  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன. வங்கி ஊழியர்களை வழிமறித்து  ஊழியர்கள் பணிக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கும் காட்சிகளும் காண முடிவதாக பரவலாக செய்திகள் வெளியாகின்றன.

எனினும், ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் இது பற்றி எந்த தகவலையும் கூறாமல் அமைதி காக்கின்றனர். ஆனால், அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையோடு கூறிய போலீஸ் ஒருவர்,  தற்போதுள்ள நிலைமை எங்களின் கைகளில் இருந்து நழுவக்கூடும் என்று தெரிவித்தார். 

இதற்கிடையே, அங்குள்ள கடை உரிமையாளர் ஒருவர் கூறும் போது,  நாங்கள் சந்தைகளை திறக்க தயாராகவே உள்ளோம். ஆனால், நான் வீட்டிற்கு செல்லும் போது எங்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் கொடுப்பார்கள். நாங்கள் தனிப்பட்ட முறையில் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசித்தோம். ஆனால்,  எங்களின் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை” என்றார். 

Next Story