மராட்டியம்: ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்டுவதா? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்


மராட்டியம்: ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்டுவதா?  எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 5 Oct 2019 7:49 AM GMT (Updated: 5 Oct 2019 9:46 AM GMT)

மராட்டியத்தில் உள்ள ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மும்பை,

மெட்ரோ ரெயில் திட்டத்தின் பணிமனை அமைப்பதற்காக ஆரே காலனி பகுதியில் உள்ள  2 ஆயிரத்து 700மரங்களை வெட்டுவதற்கு மும்பை மெட்ரோ ரெயில் கழகத்துக்கு மும்பை மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது.

இதற்கு பிரபலங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ஆரே காலனியை வனப்பகுதியாக அறிவிக்க கோரி தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் நான்கு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, மரங்களை வெட்டும் பணியில் நள்ளளிரவில் அரசு தீவிரமாக இறங்கியது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்த காரணத்திற்காக நேற்று இரவு முதல் மும்பையின் பல சமூக ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.  மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக 38 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ஆரே காலனிக்கு வெளியில் சில போராட்டக்காரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் போலீசாரால் காலனிக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் இரவோடு இரவாக மரங்களை வெட்டுவதற்காக அதிகாரிகள் வந்துள்ளனர் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.  இதையடுத்து, அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் இரவு முழுவதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்றும் போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஆரே காலனி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

மகாராஷ்டிராவில் வரும் 21-ம் தேதி  சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆரே காலனி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மராட்டியத்தில் ஆளும் பாஜக, சிவசேனா கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளன.  சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரேவை மறைமுகமாக சாடியுள்ள  எதிர்க்கட்சிகள், “ போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இப்போது எங்கே உள்ளனர்” என்று கேள்வி எழுப்பியுள்ளன. 

Next Story