மும்பை ஆரே காலனி போராட்டம்: சுப்ரீம்கோர்ட்டு சிறப்பு அமர்வு முன் நாளை விசாரணை


மும்பை ஆரே காலனி போராட்டம்: சுப்ரீம்கோர்ட்டு சிறப்பு அமர்வு முன் நாளை விசாரணை
x
தினத்தந்தி 6 Oct 2019 11:52 PM IST (Updated: 6 Oct 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

மும்பை ஆரே காலனி போராட்டம் தொடர்பான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அமர்வு முன் நாளை நடைபெற உள்ளது.

மும்பை,

நாட்டின் நிதி நகரான மும்பையில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொலபா-பாந்திரா-சீப்ஸ் இடையே செயல்படுத்தப்படும் 3-வது மெட்ரோ வழித்தடத்தின் பணிமனையை மும்பை ஆரே காலனி பகுதியில் அமைக்க மெட்ரோ ரெயில் கழகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக மும்பையின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் ஆரே காலனி பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 656 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து ஆரே காலனியில் மரங்கள் வெட்டும் பணியை மெட்ரோ ரெயில் கழகம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

இதுபற்றி அறிந்ததும் அங்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் திரள தொடங்கினர். அவர்கள் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மரங்கள் வெட்டுவதை தடுத்து நிறுத்தவும் முயன்றனர். போலீசார் அங்கு வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க முயன்ற பசுமை ஆர்வலர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, ஆரே பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு மாணவர்கள் குழு இன்று கடிதம் அனுப்பி இருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு இன்று சிறப்பு அமர்வை அமைத்தது.

இந்தக் கடிதத்தை, பொது நல வழக்காக பதிவு செய்யவும், அவசர வழக்காக விசாரிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. இதன்படி இந்த வழக்கு  சுப்ரீம் கோட்டில் நாளை காலை விசாரணைக்கு வர உள்ளது.

Next Story