காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்; காங்கிரஸ் ‘திடீர்’ புறக்கணிப்பு - வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அறிவிப்பு


காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்; காங்கிரஸ் ‘திடீர்’ புறக்கணிப்பு - வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2019 10:55 AM GMT (Updated: 9 Oct 2019 9:06 PM GMT)

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான வட்டார வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல், வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசிநாள் ஆகும். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவே ஆகும்.

இந்தநிலையில், இந்த தேர்தலை புறக்கணிப்பதாக காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.ஏ.மிர் நேற்று ஜம்முவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெறும் காலகட்டம் குறித்து எங்களுக்கு அதிருப்தி இருந்தபோதிலும், தேர்தலில் பங்கேற்க நாங்களும், தேசிய சிறுத்தைகள் கட்சியும் முடிவு செய்தோம். தேர்தலில் போட்டியிட வசதியாக வேட்பாளர்களுக்கு கடிதங்கள் வழங்கினோம். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

எங்கள் கட்சி தலைவர்கள் சுமுகமாக நடமாட நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டோம். ஆனால், வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாளில், இந்த தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.

ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவதில் காங்கிரசுக்கு நம்பிக்கை உள்ளது. தேர்தலை பார்த்து பயந்து ஓடியதில்லை. ஆனால், மாநில நிர்வாகத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மை மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு இருப்பது ஆகியவற்றால் இந்த முடிவுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

பா.ஜனதா வெற்றிபெற வசதியாக, முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு மாநில நிர்வாகம் வேண்டுமென்றே இடையூறு செய்கிறது. அரசியல் தலைவர்களையும், தொண்டர்களையும் தொடர்ந்து காவலில் வைத்து வருகிறார்கள். அரசியல் பணி நடக்கவிடவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி குறிவைத்து தாக்கப்படுகிறது.

ஆகவே, மாநில நிலவரத்தை கவனத்தில்கொண்டு, அனைத்து எதிர்க்கட்சிகளும் கோருவதுபோல், வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு ஜி.ஏ.மிர் கூறினார்.


Next Story