காஷ்மீரில் செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மக்கள் கொண்டாட்டம் - உறவுகளுக்கு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறினர்


காஷ்மீரில் செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மக்கள் கொண்டாட்டம் - உறவுகளுக்கு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறினர்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:30 PM GMT (Updated: 14 Oct 2019 9:49 PM GMT)

72 நாட்களுக்குப்பிறகு செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த காஷ்மீர் மக்கள், தங்கள் உறவுகளை தொடர்பு கொண்டு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தொலைபேசி, செல்போன், இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.

இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வசித்து வரும் தங்கள் உறவுகளுடன் தொடர்பு கொள்ள முடியாமல் காஷ்மீர் மக்கள் பெரும் அவதியடைந்தனர். மாநிலத்தில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால், அண்டை ஊர்களில் வசித்து வரும் உறவுகளையும் சென்று பார்க்க முடியாத நிலை நீடித்தது.

இந்த கட்டுப்பாடுகள் பின்னர் ஜம்மு பிராந்தியத்தில் விலக்கப்பட்டு, அங்கு தகவல் தொடர்பு சேவைகளும் மீண்டும் வழங்கப்பட்டன. ஆனால் காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடித்ததால் இந்த சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டே இருந்தன.

இந்த நிலையில் காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்த மாநில அரசு, அங்கு முதல் கட்டமாக ‘போஸ்ட்பெய்டு’ வாடிக்கையாளர்களுக்கு (சுமார் 40 லட்சம் பேர்) மட்டும் சேவையை மீண்டும் வழங்க முடிவு செய்தது. அதன்படி நேற்று முதல் அனைத்து நிறுவனங்களின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் செல்போன் இணைப்பு வழங்கப்படுகிறது.

இதற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் நிறுவனங்களின் சேவை மையங்களுக்கு சென்று மீண்டும் செல்போன் இணைப்பை பெற்று வருகின்றனர். இதனால் அனைத்து சேவை மையங்களிலும் அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

முன்னதாக காஷ்மீரில் தரைவழி இணைப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்தன. எனினும் பிரீபெய்டு (சுமார் 25 லட்சம்) செல்போன் இணைப்புகள் மற்றும் இணையதள வசதிகள் இன்னும் முடங்கியே உள்ளன.

இதற்கிடையே 72 நாட்களுக்குப்பின் மீண்டும் செல்போன் இணைப்பு பெற்றதால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூரில் இருக்கும் தங்கள் உறவுகளை அழைத்து மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த ஆகஸ்டு மாதம் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தின் போது செல்போன் இணைப்புகள் முடக்கப்பட்டு இருந்ததால் வாழ்த்து கூற முடியாதவர்கள், நேற்று பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதனால் காஷ்மீர் மக்களிடையே ஒருவித கொண்டாட்ட மனநிலை காணப்படுகிறது.

ஸ்ரீநகரை சேர்ந்த பஷரத் அகமது என்பவர் செல்போன் இணைப்பு பெற்ற 1 மணி நேரத்துக்குள் 30 அழைப்புகளை செய்துள்ளார். இது தொடர்பாக மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் கூறுகையில், ‘டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் எனது உறவுகளிடம் 70 நாட்களுக்கு மேலாக பேச முடியாமல் இருந்தேன். தற்போது செல்போன் இணைப்பு கிடைத்த நிலையில், நாங்கள் அனைவரும் இன்னும் உயிருடன்தான் இருக்கிறோம் என்பதை அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் நிகத் ஷா என்ற பெண் கூறும்போது, ‘இந்த நாள் (நேற்று) பக்ரீத் பண்டிகையை போன்று சிறப்பானது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த காலத்தில் எல்லைகளை கடந்து உலகம் ஒன்றாக இணைந்திருக்கிறது. ஆனால் நாங்கள் 2 மாதங்களுக்கு மேலாக உலகின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக் கப்பட்டு இருந்தோம்’ என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

இதைப்போல, செல்போன் இணைப்புகள் மீண்டும் கிடைத்துள்ளதால், முடங்கியுள்ள தங்கள் வர்த்தகம் சீரடையும் என தங்கும் விடுதிகள், சுற்றுலா நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளும் மகிழ்ச்சியை வெளியிட்டனர்.

செல்போன் இணைப்புகள் நேற்று முதல் சீரடைய தொடங்கினாலும், அங்கு மக்களின் இயல்பு நடவடிக்கைகள் தொடர்ந்து 10-வது வாரமாக முடங்கிய நிலையில்தான் உள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டும், வாகனங்கள் இயக்கமின்றி சாலைகள் வெறிச்சோடியுமே காணப்படுகின்றன.

காஷ்மீரின் கண்டர்பெல் மாவட்டத்தில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story